Breaking
Mon. Dec 23rd, 2024

மியான்மரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா, வங்காள தேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு மியான்மர். முன்பு இது பர்மா என்று அழைக்கப்பட்டது. பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். சீனர்கள் 3 சதவீதம் பேரும், இந்தியர்கள் 2 சதவீதம் பேரும் வசிக்கிறார்கள்.

2014 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மொத்த மக்கள் தொகை 5 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் பேர் ஆகும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பர்மா 1948–ல் விடுதலை அடைந்தது. அதன் பிறகு 1962–ல் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் நிவின் ஆட்சியைக் கைப்பற்றி கடும் சட்ட திட்டங்களை கொண்டு வந்தார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு 1990–ம் ஆண்டு தேர்தல் நடத்த ராணுவ ஆட்சியாளர்கள் முன் வந்தனர். இந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. என்றாலும் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சி மறுத்து விட்டது.

2011–ம் ஆண்டு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. அமைதி மற்றும் வளர்ச்சி கவுன்சில் அமைப்பை ஏற்படுத்தி அதன் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. என்றாலும் அதன் அதிபராக ராணுவ தளபதி தெயின் செயின் இருந்து வந்தார்.

அதன் பிறகு தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் பர்மா இணைந்தது. தொடர்ந்து பர்மா பெயர் மியான்மர் என்றும் தலைநகர் ரங்கூன் பெயர் யங்கூன் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர எதிர்க்கட்சி தலைவரான ஆங் சான் சூகி போராடினார். அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைத்து இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் 2010–ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

21 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விடுதலையான அவரை உலக நாடுகள் வரவேற்றன. 1991–ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1992–ல் மத்திய அரசு ஜவகர்லால் நேரு விருது வழங்கி கவுரவித்தது. இது போல் பல்வேறு நாடுகள் அவருக்கு அமைதிக்கான விருதுகளை வழங்கியது.

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஓட்டுப் பதிவு நடந்தது. இதில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும் பாலான இடங்களில் வெற்றி பெற்றது. 90 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளது.

முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தற்போது வாக்குறுதி அளித்துள்ளது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி அதிபராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மியான்மரில் வெளிநாட்டவரை மணந்தவர்கள் அதிபர் பதவி வகிக்க முடியாது என்ற ராணுவ ஆட்சியின் போது தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் ஆங்கிலேயரான மைக்கேல் ஆரிசை மணந்த ஆங் சான் சூகியால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்ட போது, ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் அரசின் முடிவுகளை தானே எடுக்க இருப்பதாகவும், அதிபருக்கும் மேலான பொறுப்பை வகிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆங் சான் சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தற்போதைய அதிபரான ஜெனரல் தெயின் செயின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓட்டு எண்ணிக்கை முடிந்து முழு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு அங்கு புதிய ஆட்சி அமைக்கும் பணி நடைபெறும்.

By

Related Post