Breaking
Thu. Dec 26th, 2024

“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு, மஹாநாம வித்தியாலயத்தின் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

அத்துடன், குறித்த ஆசிரியைக்கு நட்டஈடு வழங்குமாறும், பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை அரசியல் அமைப்பில் 12.1 உறுப்புரை மற்றும் 14.1 உறுப்புரையில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. (1) சட்ட நிர்வாகம், நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் எனபன நியாயமானதாக இருத்தல் வேண்டும்.

 14. (1) சகல பிரஜைகளுக்கும்

(அ) பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

தன்னை பதவி நீக்கியமைக்கு எதிராக குறித்த ஆசிரியையினால், அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு, இந்தத் தீர்ப்பை வழங்கியது.

அண்மையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது, ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து, மேற்படி ஆசிரியை தகவல் வெளியிட்டிருந்தார். பிரதிவாதிகளான அதிபர் உள்ளிட்ட இருவர், ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈட்டை, பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

By

Related Post