Breaking
Sun. Dec 22nd, 2024

– க.கிஷாந்தன் –

இலங்கையில் தேசிய இடமாற்றக்கொள்கை இருந்தும் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த கொள்கை பின்பற்றப்படுவதில்லை என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆசிரியர் வே.இந்திரசெல்வன் தெரிவிக்கின்றார்.

பின்தங்கிய இடங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிலர் 20 வருடங்களுக்கும் மேலாக வசதியான பாடசாலைகளிலே கடமையாற்றுவதால், பல ஆசிரியர்கள் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாவதோடு, இதனால் பின்தங்கிய பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களின் பெறுபேறுகளும் வீழ்ச்சியடைந்த நிலைமையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர், கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் பணிப்பாளர், வலப்பனை கல்வி பணிப்பாளர்களுக்கு கூட்டாக பல ஆசிரியர்கள் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் எடுத்துக்கூறிய போதிலும் இதுவரை இடமாற்ற சபையைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இடமாற்ற சபையினூடாக சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றங்களை பெற்றுக்கொடுக்க கூடிய வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாகவும் வே.இந்திரசெல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வலப்பனை கல்வி வலயத்தில் கடந்த 6 வருடங்களாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமையினால் அதிகஷ்ட பிரதேசத்தில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை  எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 தொடக்கம் 12 வருடங்களாக கஷ்ட பிரதேசங்களிலே கல்வி கற்பிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் ஆசிரியர்கள் இருப்பதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் வலப்பனை அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வலப்பனை கல்வி வலயத்தில் நியமனம் பெற்ற ஒரு சில ஆசிரியர்கள் 3 மாதத்திற்குள் தனக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது கல்வி அதிகாரிகளினுடைய அசமந்தப் போக்கை காட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆசிரிய இடமாற்ற சபையினூடாக முறையாக கஷ்டப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் வசதியான பாடாசலைகளுக்கு இடமாற்ற கூடியவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By

Related Post