மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் ஆட்சிப்பீடத்திற்கு ஏற்றவே தற்போதைய பாராளுமன்றம் முயற்சிக்கின்றன. எனவே மக்களின் ஆணையை இழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் இனிமேல் ஏற்படுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பெறப்பட்ட புரட்சிகரமான வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு புதிய பாராளுமன்றம் அவசியமாகும்.
எனவே அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற் கொண்டாவது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு அலரி மாளிகையில் இளைஞர்களை சந்தித்த போதே பிரதமர் ரணில் விக்கிரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஜனவரி 8 ஆம் திகதி எதிரணிகள் ஒன்று திரண்டு ஆரம்பித்த புரட்சி இதுவரை நிறைவுப்பெறவில்லை. ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்ததை போன்று நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பதே எமது புரட்சியின் பிரதான இலட்சியமாகும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட இளைஞர்களின் அடிப்படை பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.
ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் போது நாட்டில் அச்சமான சூழலே காணப்பட்டது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியானது, தனது அரசியல் வரலாற்றில் பாரிய தியாகம் செய்து எதிர்த் தரப்பு கட்சியின் பொதுச் செயலாளரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி நாட்டில் நிலைக்கொண்டிருந்த அராஜக ஆட்சியை இல்லாமல் செய்தது.
இந்நிலையில் இந்த அரசியல் புரட்சியினூடாக சுமார் ஐந்து வருடங்களில் தொடர்ந்து செய்து முடிக்க முடியாத வேலைத்திட்டங்களை 100 நாளில் செய்து முடித்து வரலாறு சாதனை படைத்தோம். ஜனாதிபதி தேர்தலில் ஆரம்பித்த புரட்சியானது எமது பிரதான இலட்சியம் நிறைவடைந்த பின்னரே உறுதியப்படுத்தப்படும். இதன் பிரகாரம் புதிய பாராளுமன்றம் உருவானால் மாத்திரமே ஜனவரி 8 ஆம் திகதி வெற்றிக்கொண்ட புரட்சியை உறுதி செய்யும் வகையில் எமது பிரதான இலட்சியத்தை வெற்றிக்கொள்ள முடியும்.
தற்போதைய பாராளுமன்றம் நல்லாட்சி வேலைத்தி;ட்டங்களுக்கு உதவுவதாக தெரியவில்லை. எமது வேலைத்திட்டங்களுக்கு எந்த தருணத்திலும் இடைய+று விளைவிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர். எனவே தற்போதைய பாராளுமன்றம் மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் ஆட்சிப்பீடத்திற்கு கொண்டு வரவே முயற்சிக்கின்றன.
மேற்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஜனவரி மக்களின் ஆணை கிடைக்கப்பபெற வில்லை. எனவே மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை இனிமேல் ஏற்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளியோம்.
நாட்டு இளைஞர்களுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டங்களை வெற்றிக்கரமாக செய்து முடிப்பதற்கு சிறுப்பான்மை அரசாங்கத்தை பெரும்பான்மை ஆக்கி தாருங்கள். எனவே நாட்டு அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற் கொண்டாவது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். இதன்போதே இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் நாட்டை எம்மால் பெற்றுத்தர இயலும். எமது கொள்கையின் ஊடாக மாதம் 50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெறும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்போம் என்றார்.vk