ஜனவரி-8இல் இந்த நாட்டில் மாற்றம்ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை மோசமடைந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
மார்ச் மாதம் நடை பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 28ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் முன்னாள் ஆட்சியாளர்கள் பலருக்குப் பயணத்தடை விதிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இராணுவப் பிரதானிகள் சிலருக்கும் இப்படியான நிலைமை இருந்தது. பொருளாதாரத்தடை விதிக்கப்படும் ஆபத்தும் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. உறுப்பு நாடுகள் இதனைச் செயற்படுத்தும் போது இலங்கையின்பொருளாதாரத்தில் 50 சதவீத பாதிப்பு ஏற்படும். இலங்கையில் பல இலட்சம் பேர் தொழில் இழந்திருப்பார்கள்.
எமது செயற்பாடுகளின் உண்மையான அளவுகோலை எதிர்வரும் 30ஆம் திகதி காணக்கூடியதாக இருக்கும் -என்றார்.