Breaking
Mon. Dec 23rd, 2024

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை (ஜுன் 29, 2016) ஆட்டுக் கொட்டில் தீப்பற்றி எரிந்ததில் அந்தக் கொட்டிலில் அடைக்கப்பட்ட ஆடுகளில் சுமார் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து மடிந்துள்ளதாக அதன் உரிமையாளரான கந்தப்போடி விஸ்வநாதன் (வயது 38) தெரிவித்தார்.

மொத்தமாக தன்னிடமிருந்த 56 ஆடுகளில் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து போக மீதமாக 9 ஆடுகளே தீக்காயங்களுக்கு உட்பட்டு எஞ்சியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமை வழமைபோன்று ஆடுகளைக் கொட்டிலில் அடைத்து விட்டு அதற்கருகில் நுளம்பு, கொசுக்கடி மற்றும் குளிரிலிருந்து காப்பதற்காக ஆட்டுக் கொட்டிலுக்கு அருகில் தீ மூட்டுவது வழமை. சம்பவ தினத்தன்றும் தீ மூட்டப்பட்டது. அந்தத் தீயே ஆட்டுக் கொட்டிலில் பரவியுள்ளது. இதன்காரணமாகவே ஆடுகள் தீயினால் கருகி இறந்துள்ளன. நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி தீச்சுவாலை ஏற்பட்டதும், அயலவர்கள் கண்விழித்து சத்தமிட்டுக் கூவி ஆட்டுக் கொட்டில் உரிமையாளரை எழுப்பியுள்ளனர். அதன்பின்னரே ஆட்டுரிமையாளருக்கு ஆட்டுக் கொட்டிலில் தீப்பிடித்தது தெரியவந்திருக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பில் ஆட்டுரிமையாளரின் மனைவி நிர்மலாதேவி விஸ்வநாதன் (வயது 35) கொக்கட்டிச்சோலைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த சோகோ  பொலிஸார் தடய விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆட்டுக் கொட்டில் சதி நாச வேலை காரணமாக தீயிடப்பவில்லை என்றும், அங்கு ஏற்கெனவே மூட்டப்பட்டிருந்த தீயே மெல்ல மெல்ல ஆட்டுக் கொட்டிலில் பரவி சேதத்தை விளைவித்துள்ளது என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post