Breaking
Fri. Nov 22nd, 2024
முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்​கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் வேக எல்லையை 30 கிலோ மீட்டராக மட்டுப்படுத்துமாறும் மேற்படி சபை கோரியுள்ளது.

இந்த பரிந்துரைகளை சட்டமாக்கவும் அதற்கான சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை மட்டுப்படுத்துவதுவது குறித்து வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய சபை ஆராய்து வருகிறது.

இது தொடர்பில் காலிமுகத்திடல் ​ஹோட்டலில் உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பங்களிப்புடன் மாநாடொன்று இடம்பெற்றது.

இங்கு தெற்காசியா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் தற்பொழுது பின்பற்றப்படும் வீதி ஒழுங்கு விதிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய யோசனைகள் பற்றியும் ஆராயப்பட்டது

இதனடிப்படையில் புதிய பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டதாக வீதிப் பாதுகாப்பு தேசிய சபை தலைவர் சட்டத்தரணி சிசிர கோதாகொட தெரிவித்தார்.

தற்பொழுது வாகனம் ஓட்டுகையில் சாரதி பருகக்கூடிய மதுசாரத்தின் அளவு 0.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை 0.45 ஆக குறைக்கவும் சாரதிகளை பரீட்சிப்பதற்காக புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரதான நகரங்களில் அதிக விபத்துக்கள் இடம்பெறும் இடங்களில் சீ.சி.டீ.வி கமராக்களை பொருத்தவும் சட்டங்களை கடுமையாக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு வாகனங்களில் சிறு பிள்ளைகளை எடுத்துச் செல்கையில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீற்றர் வேக எல்லையை 30 கிலோ மீற்றராக மட்டுப்படுத்துமாறும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

வீதி நிர்மாணம் தொடர்பில் சாரதிகளையும் பொதுமக்களையும் அறிவூட்டுவதற்காக குறித்த இடத்துக்கு முன்பாக சமிக்ஞை பலகைகளை பொருத்தவும் வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து சேதம் என்பவற்றிற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்குமறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் வீதி விபத்துக்களினால் வருடாந்தம் 2500 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post