தாய், தந்தையரை இழந்து சபை ஒன்றின் பாதுகாப்பில் வளர்ந்த சிறுமி ஒருத்தியைச் சபையின் மதபோதகர் சில ஆண்டுகளாகத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இதுகுறித்துப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதையடுத்து குறித்த பாதிரியார் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
சிறுமிக்கு ஒரு இளைய சகோரனும் உண்டு. பெற்றோர் இல்லை. அதனால் சிறுமி இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார்.
அங்கிருந்து சிறுமியை மருத்துவர் ஒருவரும் அவரது தாயும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். சகோதரனை வேறு யாரோ அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் சில ஆண்டுகள் கடந்ததும் மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
அவரின் தாயால் சிறுமியைப் பராமரிக்க முடியவில்லை. அவர் சிறுமியை மீண்டும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்தார். அதன்பின்னர் குறித்த போதகர் சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்துள்ளார். அந்தப் போதகருக்கு மனைவியும் உள்ளார்.
போதகரின் மனைவி வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுமியை அவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றார் என்று கூறப்படுகின்றது. இது 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. அதன்பின்னர் போதகர் வெளிநாடு சென்றுள்ளார். 2012ஆம் ஆண்டு அவர் மீளவும் திரும்பி வந்துள்ளார்.
அதன்பின்னர் சிறுமியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில் சிறுமி கடந்த வாரம் இதுகுறித்து வெளியே கூறியுள்ளார். அதையடுத்து சிறுமியை முன்னர் வளர்த்தவர்களின் உதவியுடன் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடயம் வெளியானவுடன் குறித்த போதகர் கொழும்பு சென்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.