முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில் வபாத்தான செய்தியறிந்து, தான் மிகுந்த கவலை கொள்வதாகவும், அவரது குடும்பத்தாருடன் இணைந்து இந்த வேதனையைத் தானும் பகிர்ந்துகொள்வதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஆதில் பாக்கிர் மாக்கார் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலே திறமையுள்ள மாணவராகவும், துடிப்பானவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே கல்வியிலே உயர்நிலையை அடைந்து, தலைமைத்துவம் சார்ந்த பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்தவர்.
இளைஞர் சமூகத்துக்கு அவர் தன்னால் முடிந்தளவில் பணியாற்றி இருக்கின்றார். இளம் சட்டத்தரணியான அவர், ஐக்கிய நாடுகள் அமையத்தின் இளைஞர் அமைப்பின், இலங்கைப் பிரதிநிதியாக இருந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டியவர். தலைமைத்துவ பண்பிலே சிறந்து விளங்கியதனால் இளைஞர் பாராளுமன்றத்துக்கும் தெரிவானார்.
அண்மையில், பொருளாதாரத் துறையில் பட்டப்படிப்புக்காகப் புலமைப்பரிசில் பெற்று லண்டன் சென்றிருந்த, அவரின் திடீர் இழப்பால் வருந்தும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன். அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை இறைவன் நசீபாக்குவானாக. ஆமீன்!