அனைத்து துறைகளிலும் நாம் வளர்ச்சியடைந்தாலும், ஆன்மீக வளர்ச்சியே ஆத்ம திருப்தியளிக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி நிகழ்வு, நேற்று மகாவலி கங்கையில் இடம்பெற்ற நீர்வெட்டு சடங்குடன் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
‘கண்டி பல்லேகலயில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச பௌத்த மையத்தைஇ மேலும் விஸ்தரித்து பௌத்த தர்மத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எமது நாட்டில் வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு அவசியமான பொருளாதாரத்தை மேம்படுத்தி, சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டில் நவ்லாட்சியை சக்திமிக்க ஒன்றாக மாற்ற வேண்டும்.
அத்துடன் புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல வேண்டும்.
ஆனால் இவை எல்லாவற்றிற்றும் மேலாக, இறுதியாக எமக்கு கிடைக்கும் ஆன்மீக வளர்ச்சியே மிகவும் முக்கியமானது,ஆகவே நல்லாட்சியடன் கூடிய ஜனநாயக நாட்டில், பௌத்த தத்துவத்தை ஊக்குவிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்’ என தெரிவித்தார்.