ஆர்.ரஸ்மின், ஏ.எச்.எம்.பூமுதீன்
எமது மாவட்ட தமிழ் மக்கள் மீது அதிக பாசம் கொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு முல்லைத்தீவில் காமன்ட் ஒன்றை நிருவுவதற்கும் தீர்மானித்துள்ளார எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் முல்லை. மாவட்ட இணைப்பாளர் எஸ்.விஜிந்தன், ஒரே தடவையில் மூவாயிரம் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்குவது என்பது எவரும் செய்திராத பெரும் சாதனையாகும் எனவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மத்தி பொதுமண்டபத்தில் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் தலைமை தாங்கி பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பயிற்சி நிலையங்களில் தமிழ், முஸ்லிம் என 800 யுவதிகள் குறித்த தையல் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர். தொடர்ந்து ஆறு மாத காலம் இடம்பெறவுள்ள பயிற்சி நெறியின் முடிவில் பெறுமதியான சான்றிதழ் மற்றும் 35 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க தையல் இயந்திரம் எனன்பனவும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் அனுமதியைப்பெற்று எமது முன்னெடுக்கும் இந்த பணியில் எமது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட யுவதிகள் தமது வாழ்வில் முன்னேற்றம் அடைய இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, எல்லோரும் அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். கடந்த போரினால் எமது மாவட்டம் கூடுதலான அழிவை சந்தித்தது. இதனால் எமது அன்றாட வாழ்க்கையில் நாம் பல துன்பங்களை சந்தித்திருக்கிறோம். எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி தலமையிலான அரசாங்கத்தை தவிர, எமது மாவட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ரிசாத் பதியுதீனைத் தவிர, அறிக்கைகள் மூலம் வீரவசனம் பேசிக்கொண்டிருப்பவர்களினால் எதுவும் செய்ய முடியாது.
இன்று எமது மாவட்டம் பாரிய அபிவிருத்தியை அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் அரச துறையில் வேலைவாய்ப்பைப் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெற்றுக்கொடுத்துள்ளார்.
என்ன அபிவிருத்திப்பணிகளை கேட்டாலும் எனது மாவட்ட மக்கள், என்னுடைய சகோதரர்கள் என்ற உணர்வுடன் இன, மத, பிரதேச, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அதனை உடனடியாக செய்து கொடுக்குமாறு தன்னுடைய அதிகாரிகளுக்கும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கும் ஒரு சாணக்கிய தலைவராக விளங்குகிறார்.
எனவே, நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்திருப்பதன் மூலமே எமது மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள முடியும்.அற்ப சொற்ப அரசியல் இலாபத்திற்காக பிரிந்து நின்று செயற்படுவதால் அது எமது மாவட்டத்திலுள்ள மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாகி விடும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன். – என்றார்