ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்கின்றது.
ஆயுர்வேத வைத்திய பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவது இல்லை என்றும், அரசாங்கம் ஆயுர்வேத மருத்துவப் பீடத்தை மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினால் தலைநகர் முற்றுமுழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.