Breaking
Mon. Dec 23rd, 2024

அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைமை போட்டியில் தோல்வியடைந்த டோனி அப்போட் பிரதமர் பதவியை இழந்த தோடு அந்நாட்டுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இழுபறி நீடித்த லிபரல் கட்சியின் தலைமைக்காக நேற்று நடத்தப்பட்ட அவசர வாக்கெடுப்பில்அப்போட் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினரான மல்கம் டர்ன்புல்லிடம் தோல்வியடைந்தார்.

ஏற்கனவே மோசமான கருத்துக் கணிப்பை பெற்றிருந்த அப்போட் கட்சி உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பில் 44 வாக்குகளையே வெல்ல முடிந்தது. டர்ன்புல் 54 வாக்குகளை வென்று தலைமை பதவியை கைப்பற்றினார்.

இதில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரான ஜுலியா பிசோப் கட்சியின் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிக்க லிபரல் எம்.பிக்கள் வாக்களித்தனர்.

இதன்படி, ஆளும் கன்சர்வேடிவ் கூட்டிணியின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அப்போட் ஆளுனரிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரும் முன் னாள் தொழிலதிபருமான டர்ன்புல் அவுஸ்திரேலியாவின் 29 ஆவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

முன்னதாக கென்பராவில் நேற்று நடந்த ஊடக மாநாட்டில் அப்போட் தொடர்ந்தும் தலைமை பதவியில் இருந்தால் ஆளும் கூட்டணி அடுத்த தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று டர்ன்புல் குறிப்பிட்டிருந்தார். அவுஸ்திரேலியாவுக்கு புதிய பாணியிலான தலைமை தேவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கட்சியின் தலைமை பதவியில் இருந்து டர்ன்புல்லை அப்போட் தோற்கடித்திருந்தார். எனினும் டர்ன்புல் நாட்டின் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று கருதப்பட்டு வந்தவராவார்.

டர்ன்புல் கார்பன் வர்த்தக திட்டம், ஒருபால் திருமணம் மற்றும் அவுஸ்திரேலிய குடியரசு ஒன்றுக்காதரவு கொண்டவராவார். எனினும் இந்த நிலைப்பாட்டுக்கு அவரது வலதுசாரி கட்சியினரிடம் ஆதரவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்திருப்பதே அப்போட்டின் பிரபலம் குறைவதற்கு காரணம் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், ஆளும் கட்சிக்குள் அடிக்கடி சதிகள் நிகழ்ந்து நாட்டின் தலைமையில் அடிக்கடி மாற்றம் நிகழ்வது அவுஸ்திரெலியாவில் அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான கெவின் ரூட்டை 2010 ஆம் ஆண்டு அவரது கட்சியின் துணைத் தலைவர் ஜுலியா கில்லாட் தோற்கடித்து பிரதமர் பதவியை ஏற்றார். பின்னர், 2013 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் ரூட்டினால் கில்லாட் தலைமை பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2013 செப்டெம்பரில் இடம்பெற்ற மற்றொரு தலைமை போட்டியின் மூலமே அப்போட் அப்போதைய பிரதமர் ரூட்டை வெளியேற்றி பிரதமர் பதவியை ஏற்றார்.

Related Post