Breaking
Mon. Dec 23rd, 2024

இங்கிலாந்தின் வடக்கே, முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகர் பிரட்பேர்ட். அங்கு பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு பள்ளிவாசலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் குறைவாக இருப்பதால் தனியாக பெண்களுக்கான ஒரு பள்ளிவாசல் தேவை என்கிற திட்டத்தை தற்போது முன்னெடுப்பதாக இதற்கான பெண்கள் அமைப்பு கூறுகிறது.

பள்ளிவாசல்களின் நிர்வாகக் குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று கூறுகிறார் முஸ்லீம் பெண்கள் கவுன்சிலின் தலைவரான பனா கோரா.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பெண்களுக்கான தனி பள்ளிவாசல் திறக்கப்பட்டது. அங்கே பெண் இமாம் ஒருவர் தொழுகையை முன்நின்று நடத்துகிறார். ஆனால் பழைய நடைமுறைகளை ஆதரிக்கும் பிரிட்டிஷ் இமாம்கள் இந்த நடைமுறையை ஏற்கவில்லை. இது போல பெண்களுக்கென தனி மசூதிகளை உருவாக்குவது முஸ்லீம்களை பிரிக்கும் என்கிறார் ஷஃபீல்டில் உள்ள ஜாமியா பள்ளிவாசலின் இமாம் குவாரி சஜ்ஜட் அலி ஷமி.

மினாப் எனப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் இமாம்களின் தேசிய ஆலோசனைக் குழுவும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது. சுமார் 600 பள்ளிவாசல்கள், இஸ்லாமிய நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய அலாமா பெக் கூறுகையில், “கடந்த 1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றைப் பார்த்தால், பெண்கள் தங்களுக்காக தனியான பள்ளிவாசல்களை அமைத்துக் கொண்டதாகவோ, தொழுகையை முன்நின்று நடத்தியதாகவோ எங்கும் ஆதாரம் இல்லை. இதுபோன்ற செயல்பாடுகள் இஸ்லாமிய நெறிமுறைகளுடன் பொருந்திப் போகாதவை. இது போன்ற செயல்பாடுகள் சமூகத்துக்குள் பெரிய அளவிலான சர்ச்சைகளைத் ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. ஏனென்றால் இது நமது பாரம்பரியத்துடன் உடன்பட்டுப் போகக் கூடியது கிடையாது” என்று தெரிவித்தார்.

பெண்கள் இமாமாகத் தொழுவிப்பதற்கு இஸ்லாத்தில் சட்டம் இல்லை. இப்படி இருக்கையில் பெண்களுக்கான பெண் இமாம்களைக் கொண்டு நடாத்தப்படும் பள்ளிவாசல்கள் எதற்கு என்ற எதிர்ப்புக்களும் அங்கு எழுந்துவருகின்றன.

இஸ்லாமியப் பெண்கள் கவுன்சில் தற்போதுதான் இப்பள்ளிவாசலுக்கான இடத்தைப் பார்வையிட்டு வருகிறது

Related Post