Breaking
Mon. Dec 23rd, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமைக்குள் கடமைகளைப் பொறுப்பேற்கா விட்டால் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

ஏற்கனவே வருடாந்த இடமாற்றத்தில் 13 பேரும் கடந்த வாரத்தில் 26 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் யாரும் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. எனவே இவர்கள் உடனடியாகத் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தின் கீழ் 123 ஆசிரியர்கள் கல்குடா வலயத்திலிருந்து வேறு கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே விண்ணப்பத்தமைக்கமைய 12 – 18 வருடங்கள் கல்குடா வலயத்தில் கடமையாற்றிய 80 ஆசிரியர்கள் பதில் கடமை ஆசிரியர்கள் இல்லாது விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய 43 ஆசிரியர்கள் பதில் ஆசிரியர்கள் வழங்கப்படும் என்ற வகையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் 39 ஆசிரியர்கள் கல்குடா கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டனர். இருப்பினும் தங்களது இடமாற்றம் தொடர்பில் மேல்முறையீடு செய்தனர். அதன் பின்னர் 26பேர் கல்குடா கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

மிகுதியான 13 ஆசிரியர்களும் இதுவரை கல்குடா கல்வி வலயத்தில் கடமையேற்காத நிலையில் தற்போது 26 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்த வாரத்துக்குள் கடமைகளை தங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளில் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

பாரிய ஆசிரிய நெருக்கடியால் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக பாடசாலைகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post