இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளப் பதிவு செய்தல் தொடர்பில், வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
குறித்த பேரவையின் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளம், குருநாகல் மற்றும் இன்னோரன்ன பல மாவட்டங்களிலே வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள், 2009 ஆம் ஆண்டு சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர், தமது சொந்தப் பிரதேசங்களுக்கு மீள்குடியேறினர். அவ்வாறு மீள்குடியேறியவர்கள், தங்களுக்கு தென் பகுதியில் வழங்கப்பட்ட உலர் உணவு மற்றும் கொடுப்பனவுகளை இல்லாமல் ஆக்கிவிட்டுத்தான் மீள்குடியேறினர்.
எனினும், அவர்களுடைய தொழில் ரீதியான மற்றும் தமது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், வைத்திய வசதிகள் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக இவர்களுடைய நிரந்தர இருப்பிடத்தை மன்னார் மாவட்டத்திலும், தற்காலிக இருப்பிடத்தை புத்தளம் மாவட்டத்திலும் ஏற்படுத்தியிருக்கின்றனர். என்றாலும், அவர்கள் மன்னாரிலும் புத்தளத்திலும் மாறிமாறி, தங்களது இடங்களில் வாழ்ந்து வருபவர்கள்.
இருந்த போதும், அவர்களுடைய வாக்குகளை தமது பூர்வீக இடங்களிலேதான் பதிவு செய்துள்ளனர். அவ்வாறான வாக்காளர்களுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, கொத்தணி ரீதியான வாக்களிக்கும் வசதிகள், தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில், கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வசதி பெற்றவர்களின், பதிவுகளை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குமாறு கிராம சேவகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றதும், அடிப்படை மனித உரிமையை மீறும் செயலுமாகும்.
மேலும், எந்தவொரு பிரஜையும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வசிப்பதற்கும் அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்களை, தாங்கள் வாக்காளர்காளாக பதிவு செய்துகொள்வதற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு, அது ஒருவரின் சட்டபூர்வமான உரிமையுமாகும். உதாரணமாக, கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கெளரவ முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கெளரவ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்கள் கொழும்பில் வசித்து வருகின்ற போதும், அவர்கள் முறையே ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அத்தனகல்ல ஆகிய இடங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் அவர் ஒரு வீட்டை வைத்திருக்கும் பிரதேசத்தில், அவர் தன்னை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்கு அவருக்கு உரிமையுண்டு.
கொத்தணி வாக்காளர்களாகப் பதிவு செய்தவர்கள், தங்களுடைய சொந்தக் கிராமங்களிலே மீள்குடியேறி, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வீடுகளை அமைத்து வாழ்ந்துகொண்டிருந்தவர்கள்தான், தினமும் அங்குமிங்குமாக சென்று வருபவர்கள். இவர்களுக்குத்தான் கொத்தணி வாக்கு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் எந்தவொரு பிரஜையும், தான் எந்த ஊரில் வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்பு அவரையே சார்ந்ததாகும். அதேபோன்று, அந்த வாக்காளர் எடுக்கின்ற தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்பதையும், கிராம சேவகர்களோ அல்லது உதவித் தேர்தல் ஆணையாளரோ அதனை தீர்மானிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகவே, தயவு செய்து இவ்வாறானதொரு உத்தரவை தாங்கள் பிறப்பித்திருந்தால், உடனடியாக அதனை சரிசெய்து, கிராம சேவகர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு தாழ்மையுடன் கோருகின்றோம் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.