Breaking
Tue. Jan 7th, 2025

புதிய அரசின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார்.

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணிவரை வரவுசெலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும். .

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புடன் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கான நிவாரணப் பொதிகள், தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் மறுபக்கத்தில் மக்கள் வரிகள் அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்படமாட்டாது என அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன், தனியார் ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு ஏதுவாக முதலீட்டாளர்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக வழிவகை செய்யப்படவுள்ளது.

2013ஆம் ஆண்டில் எமது நாட்டில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை சுமார் நூற்றுக்கு 5.6 வீதமாகவே காணப்பட்டது, இந்தத் தொகை 2014ஆம் ஆண்டு நூற்றுக்கு 4.9 வீதமாக குறைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாகவும் அந்த இலக்கையே தக்கவைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Post