எதிர்வரும் 29ஆம் திகதி பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமையிலிருந்து விடுபடுவதற்கு வழி திறந்து விடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கான சலுகைகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக மேலும் தகவல் தருகையில்,எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. இதில் எரி பொருட்களின் விலைகள் உட்பட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளது.
அத்தோடு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது. தனியார் துறை ஊழியர் களின் சம்பளங்களை உயர்த்துவதற்கான திட்டங்களும் தயாரிக்கப்படவுள்ளது.இனி நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை. அனைத்து வீண் விரயங்களும் ஒழிக்கப்பட்டு மக்களின் நல் வாழ்வுக்கான திட்டங்கள் தயாரிக்கப்படும்.
நாட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், மக்கள் உயிர் வாழ்வதற்கு அவர்களது வாழ்க்கை சுமையை குறைப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அரசின் கடப்பாடாகும்.அதனை மறந்தே கடந்த அரசு செயற்பட்டது.ஆனால், எமது அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்தார்.