2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 68 ஆயிரத்து 299 பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்தவொரு மாணவருக்காவது மேன்முறையீடு செய்ய வேண்டுமாயிருந்தால் அதற்கென நேற்று தொடக்கம் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
`இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இது தொடர்பான விபரங்களை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணைத்தளத்திலோ பார்வையிட முடியும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்வதன் ஊடாகவோ அல்லது 1919 என்ற அரச தகவல் நிலையத்திற்கு அழைப்பதன் ஊடாகவோ வெட்டுப் புள்ளி விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெட்டுப் புள்ளிகள் வெளியானதன் பின்னர் சகல மாணவர்களுக்கும், அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம், தெரிவு செய்துள்ள பாடநெறிகள் போன்ற விபரங்களுடனான கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். அந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றதும், குறித்த மாணவர், குறித்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்கிறாரா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். பதிவு செய்ததன் பின்னர் குறித்த பல்கலைக்கழகம் மாணவருக்கு அழைப்பு விடுக்கும். பதிவுகள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறினார்.