இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கடந்த பல தசாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் நான்கு மடங்கு நிதியை நாம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாலபே முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவதுஇ நவம்பர் 21ம் திகதி வரலாற்று முக்கியத்தும் மிக்க தினமாகும். அதேபோன்று எனது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் முக்கிய நாள்.
கடந்தவருடம் இதேநாள் தான். முன்னாள் ஜனாதிபதியுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு பின்னர் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நாளாகும். இந்நிகழ்வுக்கு இன்றோடு ஒருவருடம் நிறைவடைகின்றது. இன்றும் ஓய்வற்ற நாளாகவே உள்ளது.
கடந்த வருடம் இதேநாளில் இதே நேரத்தில் எனது மனதில் ஓடிய விடயங்களை இங்கு தெளிவுபடுத்துவது சிரமமான காரியம். அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும் வெளியாகி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் இல்லத்திற்குச் சென்றோம். அங்கிருந்து தான் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டுக்கு வருகை தந்தேன்.
இன்று எமது இலவசக் கல்வி குறித்து நாமெல்லோரும் பெருமை அடைகின்றோம். மறைந்த சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கர அன்று இலவசக் கல்விச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது பிரதிநிதிகள் சபையில் முதலில் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் அச்சட்டம் இரண்டாவது தடவையாக கொண்டு வரப்பட்டே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இன்று கன்னங்கரா கெளரவமானவராகப் பார்க்கப்படுகின்றார். அவரது புகைப்படங்கள் பெரும்பாலான பாடசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் கீர்த்தி மிக்க அவரை நாம் இன்றும் நினைவு கூருகின்றோம். தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட மறைந்த சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கர பின்னர் ஒருநாள் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்காவுக்கு கடிதமொன்றை எழுதினார்.
அக்கடிதத்தில் எனக்கு உயிர்வாழ சிரமமாக உள்ளது. அன்றாட வாழ்வைக் கொண்டு நடாத்தக் கஷ்டமாக இருக்கின்றது. பலவிதமான பொருளாதார பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுத்துள்ளேன். அதனால் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவென முறைமையொன்றை ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டிருந்தார். இது மறக்க முடியாத நிகழ்வாகும்.
எமது அரசாங்கம் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். அந்த வகையில் எமது அரசாங்கம் இவ்வரவு செலவு திட்டத்தில் இதுவரை காலமும் இல்லாதளவுக்கு நிதியை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த சில தகாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நான்கு மடங்கினை நாம் ஒதுக்கியுள்ளோம். இவற்றின் ஊடாக பெளதீக மற்றும் மனித வளம் சிறந்த முறையில் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும். குறிப்பாக கட்டடதேவைகள் நிறைவேற்றப்படும்.
தேவையான உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அத்தோடு ஆசிரியர் சேவைக்கு தேவையான ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அத்தோடு கல்விசாரா ஊழியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இவற்றின் ஊடாக பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் ஊடாக மென்மேலும் புத்திஜீவிகளை உருவாக்கவே நாம் விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, மாகாண அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.