அமெரிக்காவில் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தை இறந்தது. அது இறக்கும் தருவாயில் அதற்கு தந்தை பாடிய பாடல் அடங்கிய வீடியோ பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24 வாரங்களே இருந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது.
ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. முன்னதாக குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது கிறிஸ் அதன் அருகில் அமர்ந்து கிட்டார் வாசித்துக் கொண்டே மெல்லிய குரலில் பாட்டுபாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். வீடியோவில் குழந்தையின் முகம் தெரியவில்லை. துணியால் குழந்தையின் உடலை சுற்றி வைத்து ஆங்காங்கே டியூப்கள் இணைக்கப்பட்டதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் கண்கலங்கினர்.