Breaking
Wed. Dec 25th, 2024

இத்தாலி நாட்டின் அதிபரான ஜியோர்ஜியோ நப்பொலிட்டனோ உடனடியாகத் தனது பதவியைத் துறக்கும் முடிவை எடுத்திருப்பதாகப் பிரதமர் மத்தேயோ ரென்ஷி அறிவித்துள்ளார்.

இதற்கு முன் இத்தாலியில் அரசியல் கொந்தளிப்பு நிகழும் போதும் அந்நாட்டை வழிநடத்தத் தனது பதவிக் காலத்தை அதிகரித்திருந்த முன்னால் கம்யூனிச ஆதரவாளரான 89 வயதாகும் நப்பொலிட்டனோ திடீரென பதவி விலகியது, அவரது இடத்தை நிரப்ப இன்னொருவரை நியமிப்பதையும் சவாலாக்கியுள்ளது.

1953 ஆம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினரான நப்போலிட்டனோ 2006 ஆம் ஆண்டு முதலில் அதிபரானார். பின்னர் 2013 அளவில் இத்தாலியில் நடந்த இழுபறித் தேர்தலின் விளைவாக அங்கு மோசமடைந்த அரசியல் நிலமையின் மத்தியிலும் 2 ஆவது தடவையாகத் தனது பதவிக் காலத்தை நீட்டித்திருந்தார்.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனுக்கான கடந்த 6 மாதத் தலைமைத்துவத்தை இன்று செவ்வாய்க்கிழமை இத்தாலி நிறைவு செய்துள்ள தறுவாயில் நப்பொலிட்டனோ பதவி விலகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் அதிபர் பதவியானது தினசரி அரசியலில் சொற்ப பங்கே வகிக்கின்றது, ஆனால் அந்நாட்டுக்கு ஓர் பிரதமரைத் தேர்வு செய்வதற்கோ அல்லது பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கோ அவருக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் நாளை புதன்கிழமை நப்போலிட்டனோ உத்தியோக பூர்வமாகப் பதவி விலகுவார் என்று கூறப்படுவதுடன் இத்தாலிய சட்டப் படி 15 நாட்களுக்குள் 1009 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் இணைந்து தேர்தல் மூலம் புதிய ஏகமனதாகத் தமது புதிய அதிபரது பெயரை அறிவிப்பர் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை புதிதாகத் தேர்ந்தெடுக்கப் படவுள்ள அதிபர் தற்போது ஒருவருடமாக ஆட்சியில் இருக்கும் மத்திய் இடதுசாரிக் கட்சித் தலைவர் மற்றும் நாட்டின் பிரதமரான 40 வயதுடைய ரென்ஷிக்கு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்த வல்லவர் என விமர்சிக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

Related Post