இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது.
சீனத் தொழில்நுட்பத்துடனோ, நிதிச் சூழலுடனோ இந்தியாவால் போட்டியிட முடியாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஊடகம் வௌியிட்டுள்ள கட்டுரையில்,
இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரின் துறைமுகம் அமைப்பதற்கு இந்தியாவிடம் அவர் நிதியுதவி கேட்டபோது, அந்நாடு உதவ முன்வரவில்லை.
அதன்பிறகே சீனாவின் உதவியை ராஜபக்ஷ நாடினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவர் மீது இந்தியாவும், பிற நாடுகளும் குற்றம்சாட்டி அழுத்தம் கொடுத்த பிறகே, அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டுக்கு வந்தார்.
இந்தியாவின் தொழில் துறையோ, கட்டுமானம் – உள்கட்டமைப்புத் துறையோ சீனாவின் தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாது. இந்தியாவிடம் இருந்து நிதியுதவி பெறலாம் என்ற மைத்திரிபால சிறிசேனவின் விருப்பம் நடைமுறைக்குப் பொருந்தாது.
இலங்கையில் அதிக அளவில் முதலீடு செய்யவோ, அந்நாட்டுக்கு பெரிய நிதியுதவியை அளிக்கவோ இந்தியாவால் முடியாது. எனவே, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடருவதே நல்லது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.