இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர்.
வலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து , சிவசேனைக் கட்சி, புத்தக வெளியீட்டு விழாவுக்கு எதிராக நடத்த திட்டமிட்டிருந்த போராட்டத்தை ரத்து செய்தது.
ஆனால், சுதீர் குல்கர்னி, இந்த கறுப்பு மையுடனே, பல்வேறு பத்திரிகையாளர் கூட்டங்களில் கலந்துகொண்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை “ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” என்று குல்கர்னி வர்ணித்தார்.
ஆனால் சிவசேனை இந்த சம்பவத்தை ஒரு “வன்முறையற்ற , வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம்” என்று கூறியது.
ஆனால், சிவசேனையின் இந்த நடவடிக்கைக்கு, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான, எல்.கே.அத்வானி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இத்தகைய சம்பவங்கள் ஒருவரது கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களை சகித்துக்கொள்ளாமல் இருக்கும் நிலை அதிகரிப்பதைக் காட்டுகிறது, என்றார் அத்வானி.
அதிகரிக்கும் மத வன்முறை
கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்ற வதந்திகள் காரணமாக, 50 வயது முஸ்லீம் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
சிவசேனைக் கட்சி பாகிஸ்தான பாடகர் குலாம் அலி கலந்துகொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வைத்தது.
கடந்த வாரம் , காஷ்மீரில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், விருந்து கொடுத்த ஒரு சுயேச்சை முஸ்லீம் அரசியல்வாதியைத் தாக்கினர்.
சிவசேனை மஹாராஷ்டிர மாநில அரசில் பாஜகவின் கூட்டணிக்கட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனைக் கட்சி 1966ல் தென்னிந்தியாவிலிருந்து மும்பைக்குக் குடியேறும் மக்களுக்கு எதிராக உருவான கட்சியாகும்.
காலப்போக்கில், இந்தக்கட்சி மத மற்றும் இன வெறியைத் தூண்டும் கட்சியாகவும், சிறுபான்மையினரைக் குறிவைக்கும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.