வாகா எல்லைப் பகுதிக்கு இன்று வந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கவனக்குறைவாக இந்திய பகுதிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவருமான ஷா மஹ்மூத் குரேஷி சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டு, அங்குள்ள பாகிஸ்தான் ரேஞ்சர் படையினரிடம் விசாரித்து அனுதாபம் தெரிவித்தார்.
பின்னர், ஜீரோ பாயிண்ட் எனப்படும் எல்லையில் இந்திய அதிகாரிகளுடன் குரேஷி கைகுலுக்கினார். இதுபோன்ற நிகழ்வுகளின்போது, இரு தரப்பினரும் அவரவர் எல்லைக் கோட்டை விட்டு முன்னேறிச் செல்வதில்லை. ஆனால், இன்று தன்னையும் அறியாமல் குரேஷி ஜீரோ பாயிண்டைக் கடந்து இந்திய பகுதிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்.
இதனைக் கவனித்த பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் விறுவிறுவென முன்னால் சென்று அவரை பாகிஸ்தான் பக்கம் இழுத்தனர். இதனால், அவர் சற்று பதற்றம் அடைந்தார். இக்காட்சியை உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.