இந்தியாவிலிருந்து பஸ்கள் கொள்வனவு செய்ததில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முன்னாள் ஆட்சியில் அமைச்சரொருவரின் பங்களிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு லஞ்சம் பெற்றுக் கொண்டது தொடர்பிலும் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
வரி தொடர்பான தேசிய கொள்கைகளை நிறைவேற்றுவதில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.கம்போடியா, மியன்மார் உட்பட பல நாடுகளிலிருந்து பாக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்கிருந்து கொள்கலன்களில் இலங்கைப் பெயரில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் இதற்கான எந்த வரியும் செலுத்தப்படுவதில்லை.தற்போது அதற்கான வரியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.வரிகளை அதிகாரிக்கும் போது சில நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றும் தாம் செலுத்திய வரிகளை மீளப் பெற்றுக் கொள்கின்றது.இவ்வாறு நீதிமன்றத்தின் செயற்பாடுகளால் நாட்டுக்கு வரி வருமானம் குறைந்துள்ளது.
இது பல நெருக்கடிகளை தோற்றுவிக்கின்றது. வரிகளை அதிகரிக்குமாறு சம்பளத்தை அதிகரிக்குமாறு நீதிமன்றம் அறிவித்தால் என்ன செய்ய முடியும்.இவ்வாறான நடவடிக்கை நடைமுறை சாத்தியமானதா?
எனவே நிதியை நிர்வகிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. அதனை நீதிமன்றம் பறிக்க இடமளிக்க முடியாது.நாட்டில் 24 மதுபானம் தயாரிக்கும் கம்பனிகள் உள்ளன. ஆனால் 4 கம்பனிகள் மட்டுமே வரி செலுத்துகின்றன என்றார்.