Breaking
Fri. Jan 10th, 2025
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை அத்தியவசிய பொருட்கள், எரிபொருள், அந்நியச் செலாவணி, டொலர் பிரச்சினை உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகள் காரணமாக, சாதாரண பொதுமக்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைத்து மக்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
 
கிண்ணியாவில் இன்று  (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு  கருத்து தெரிவிக்கையில், 
 
“இந்தப் போராட்டம் எந்தவொரு அரசியல் பிண்ணனியும் இன்றி தொடர் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. ஜனாதிபதியின் வதிவிடம், செயலகம் வரை தொடர் போராட்டமாக நடந்தேறியுள்ளது.
 
ஈஸ்டர் தாக்குதலை ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தி ஆட்சியை கைப்பற்றியது  போன்று, ஜனாதிபதியின் வாசஸ்தளத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை ‘அரபு வசந்தம்’ எனக் கூறி, மீண்டும் அதே சமூகத்தின் மீது வீண்பழி சுமத்தி, ஆட்சியை தக்கவைத்த நினைக்கின்றனர். ஆனால், பௌத்த, கிறிஸ்தவ உயர்பீடங்கள் ஏனைய சமூகங்கள்  முஸ்லிம் சமூகம் அப்படிப்பட்ட துரோகங்களை செய்யவில்லை என புரிந்துகொண்டனர்.
 
அன்று திகன, அம்பாறை, பேருவளை, குருணாகல் போன்ற இடங்களில் இனக்கலவரத்தை உருவாக்கிய ஆட்சியாளர்களுக்கும் இனவாதிகளுக்கும் இங்கு இடமில்லை என்பதை, மக்கள் போராட்டம் மூலமாக சகல இனங்களும் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில், ஆட்சியாளர்களுக்கு எதிராக கோசமிட்டு  மக்கள் காட்டியுள்ளார்கள். 
 
இந்த நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கும் எதிரணியினருக்கும் இருக்கிறது.
 
இவ்வளவுக்கும் காரணம் அதி உச்சபீடமான நாடாளுமன்றம். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக அசிங்கப்படுத்தப்பட்டது, 20ஆவது சட்டம்   நிறுத்தப்பட்டு 19 ஆவது சட்டம் நிலை நிறுத்தப்பட வேண்டும். இது அனைத்து தரப்பினருடனும் கதைத்து முதற் பிரேரனையாக கொண்டு வரப்பட வேண்டும். இது மட்டுமே மறுசீரமைப்புக்கும் அரசியல் மாற்றத்திற்கும் வழி கோலும்.
 
தனியார் துறையினரை ஊக்கப்படுத்த வேண்டும் ஏனைய நாடுகளும் இவ்வாறே முன்னேற்றமடைந்தன. விவசாயிகளுக்கு தேவையான சேதனப் பசளை தொட்பில் விவசாயிகளுக்கு எடுத்து கூறப்படாமையே விவசாய செய்கை தோல்வி கண்டுள்ளமைக்கு காரணம். விலை ஏற்றம் காரணமாக யூரியா பசளை 1500 க்கு விற்பனை செய்யப்பட்டது அன்று, இன்று 45000 ரூபாவுக்கு செல்கிறது இதனால் விவசாயம் 85 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
 
டொலரின் விலையேற்றம், புதிய நாணயத்தாள்களின் உற்பத்தியும், உள்நாட்டு உற்பத்திகளின் வீழ்ச்சியும் மூல காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
 
அண்மையில் 30 அமைச்சின் செயலாளர், அமைச்சர்கள் கூடி 33 ஆலோசனைகளை வழங்கினார்கள். அமைச்சர்களை குறைக்க வேண்டும், இராஜாங்க அமைச்சர்களை குறைத்து இளைஞர்களின் வேலை வாய்ப்புக்களை  இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதை கூறிவிட்டு, ஜனாதிபதியும் பிரதமரும்   பல்வேறுபட்ட கட்சிகளின் கூட்டரசாங்கத்தை உருவாக்க  வேண்டும் என நினைக்கிறார்கள். இது அரசியல் யாப்புக்கு முரணாணதாகும். அமைச்சர்களை குறைக்க வேண்டும் எனக் கூறுகின்ற போது, கூட்டரசாங்கம் அமைத்தால் அதிகரிக்க வேண்டியே வரும் என்ற முரண்பாடுகளை நீக்க ஆட்சியாளர்களால் மட்டுந்தான் முடியும்.
 
19 ஆவது திருத்தச் சட்டம் மூலமாக நான்கரை வருடங்கள் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது என்ற விடயத்தை நிலையாக உருவாக்கினார்கள். ஆறு வருட ஆட்சியை ஐந்து வருடங்களாக குறைத்திருந்தார்கள். இருபது மூலமாக இரண்டரை வருடத்துக்கு தனி அதிகாரங்களை ஜனாதிபதிக்கு கொடுத்து, சகல சுயாதீன குழுக்களுக்களையும்  செயலற்றதாக்கிவிட்டு, பாராளுமன்றத்தையும் அர்த்தமற்றதாக்கி விட்டு பிரச்சினைக்கு தீர்வை நாங்கள் காண முடியாது.
 
எதிரணியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் பல்வேறுபட்ட கொள்கையுடையவர்கள்.  நாளை தங்களை நாட்டின் ஜனாதிபதியாகவோ தலைவர்களாகவோ ஆக்க நினைக்கின்ற அனைவரும் ஒரு மேசையில் ஒன்று கூட வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். வெறுமெனே கையொப்பம் இடுங்கள் எனக்கூறி, எந்த விடயத்திலும் கையொப்பத்தை பெற்று விட முடியாது. இதனை முறியடிப்பதற்கு ஆட்சியாளர்கள் பல்வேறு பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

Related Post