இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று (03) பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனவாதம் தான் இந்த நாட்டிலே 30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்தது.
யாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கஇல்லை. இவ்வாறான யுத்தம் வருவதற்கு காரண கர்த்தாக்களாக, இன்று இனவாதக் கருத்துக்களைப் பேசியவர்களைப் போன்று, அன்று பேரினவாத சக்திகள் ஆட்சியைக் பிடிப்பதற்காக சுயநல கொள்கையோடு இனவாதக் கருத்துக்களைப் பேசி அவ்வாறு செயற்பட்டதனால் தான் இந்த நாடு சுதந்திரம் கிடைத்த பின்னர் இன்று வரை நிம்மதி இல்லாத நாடாக இருந்து வருகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஜனாதிபதியும் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முன்வந்திருப்பது நாட்டிற்கு நல்ல சகுனமாகப் பாரக்கின்றோம்.
இந்த நல்ல சகுனத்தை உடைத்து, இன்னும் சின்னாபின்னமாக்கி இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களுடைய பேச்சு எங்களுக்குத் தென்படுகிறது என அவர் மேலும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.