Breaking
Mon. Dec 23rd, 2024

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், 250 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன், வெள்ளிக்கிழமை முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மோஹித் கோயல் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

நான்கு அமெரிக்க டாலர் அல்லது மூன்று பிரிட்டன் பவுண்டுகளுக்குக் குறைவான விலையுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், முதல் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

´´உண்மை நிலவரம் என்னவென்றால், 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் இன்று வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மொத்தம் 2 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நான் ஓடிப்போய்விட்டதாகச் சொல்கிறார்கள். நான் எங்கும் போகவில்லை. எங்களிடம் சிறிய குழுதான் இருக்கிறது. தகுதியானது என நினைத்தால் எங்கள் கனவை நனவாக்கும் பணியில் ஈடுபட அனுமதியுங்கள்´´ என்று பிபிசியிடம் தெரிவித்தார் மோஹித் கோயல்.

அதே நேரத்தில், யாரிடமிருந்தும் முன் பணம் எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் நம்பகத்தன்மை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், மோஹித் கோயல் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஃப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது. ஏழு கோடி பேர், இந்த போனுக்காக இணையதளத்தில் பதிவு செய்திருப்பதாக அந் நிறுவனம் கூறுகிறது.

பார்ப்பதற்கு ஆப்பிள் ஐ போன் 5s-ஐப் போல் உள்ளது. இருபக்க கேமரா, 4 அங்குல அகலம், ஒரு ஜி.பி. ரேம், 8 ஜி.பி உள்ளடக்க பதிவு வசதி உள்ளிட்ட வசதிகள் அதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றை சோதித்துப் பார்க்க முடியவில்லை.

ஒரு போன் தயாரிப்பதற்கு 1180 ரூபாய் செலவாகும் நிலையில், சில செயலிகளை அதில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்யும்போது, அந்த செயலிகளின் நிறுவனங்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களால் அந்த செலவை சமாளிக்க முடியும் என மோஹித் கோயல் கூறுகிறார். அப்போதும் கூட 150 ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், அரசாங்கம் அதை மானியமாக வழங்கி உதவும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால், எல்லாவற்றையும் தாண்டி, 250 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் என்பதை இன்னும் பலரால் நம்ப முடியவில்லை. முதல் சுற்றில் அந்த போன்களைப் பெறும் 5 ஆயிரம் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பதில் கருத்துக்களைப் பொறுத்தே அந்த ஸ்மார்ட் போனின் செயல் திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்த கருத்துக்கள் மாறுபடும் என வர்த்தகத் துறையினர் கூறுகிறார்கள்.

By

Related Post