Breaking
Mon. Dec 23rd, 2024

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இன ரீதியாக அல்லது தமிழ் முஸ்லிம் உறவு ரீதியாக மிகுந்த துவேசத்தை பேசுவதால் தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றார்கள்.

எதிர்காலத்திலே ஒரு தீர்வுத் திட்டம் வருகின்ற பொழுது எப்படி தமிழ் தலைவர்கள் மீது முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்கள் நம்பிக்கை கொள்வது என்ற சந்தேகம் எழுந்துள்ள அளவுக்கு இவர்களுடைய பேச்சு அமைந்துள்ளது.

இன ரீதியாக இனத்துவேசத்தை ஏற்படுத்துகின்ற பேச்சை இப்போதும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள் என்றால் அல்லது காணியை கேட்டு பிரதேச செயலாளரிடத்தில் விண்ணப்பிக்கின்ற பொழுது அதை துவேசமாக பார்ப்பார்கள் என்றால் வட கிழக்கு இணைப்பதற்கு இந்த மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன யோக்கியதை கொண்டு தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் மக்களிடத்திலே கேட்க முடியும்.

மக்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே எல்லோரும் சமமானவர்கள் தான். தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பேதமையை காட்டித்தான் நாங்கள் கடந்த காலத்தில் முப்பது வருட ஜனநாயக போராட்டம், முப்பது வருட ஆயுதப் போராட்டம் மூலம் எதையுமே நாங்கள் சாதிக்கவில்லை.

வெறுமனே இனத்துவேசத்தை தான் எங்களுக்குள் விதைத்துக் கொண்டோம். வேறு எந்த வரலாறும் எங்களையும் உங்களையும் பாதுகாக்கவில்லை. உலக வரலாற்றிலே தோன்றிய நாகரீகங்கள், போராட்டங்கள் எல்லாம் ஒரு படி முறையை, ஒரு மாற்றுமுறையை மேலோக்கிச் சென்ற வரலாறுதான் இருக்கின்றது.

உலக நாடுகளிலே ஆரம்ப காலத்தில் இருந்த இனத்தவர்கள் எல்லாம் வித்தியாசமாக மாறி தற்போது வேறு ஒரு கோணத்தில் உலகத்தில் நோக்குகின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டம் தந்த பரிசு தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்கின்ற பேதமையைத் தான் தந்துவிட்டு போயுள்ளது.

இதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இருக்கின்றது. இதைப்பற்றித்தான் நாங்கள் பேச வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இருக்க வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் பேசவில்லை என்றால் எங்களுக்கு தீர்வு என்பது பூச்சியமாக இருக்கும்.

இதனை தமிழ் அரசியல் தலைவர்கள் தெளிவாக வைத்துக் கொண்டு தான் பேசுகின்றார்கள். இது பூச்சியமான வேலைத் திட்டம், இருந்தும் ஒரு படத்தை காட்ட வேண்டும் என்பதற்காக முனைந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லோரும் ஒரு உடன்பிறப்புக்கள் தான் எதிர்காலத்தில் நாம் ஒற்றுமைப்பட்டு தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.

தும்பாலை பால முருகன் ஆலய தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், பூ.ஜெகன், மகளிர் இணைப்பாளர் திருமதி.ஜெ.மீனா, எஸ்.நித்தியானந்தன், எஸ்.மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் எட்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முப்பத்தைந்து பயனாளிகளுக்கு தலா பன்னிரண்டு தகடுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post