இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வ தனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாத கருத்துக்களை கூறி நாட்டை தீயிட்டு நாசமாக்க முனையக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அதிகாரப் பரவலாக்கம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக தெரிவித்தார்.
இதன் பிரகாரம் இனவாதத்தைத் தூண்டி நாட்டை அராஜகப்போக்கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீரவன்சவிற்கு அடிபணிந்த கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பின்தள்ளப்பட்டமை கவலையளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சிறுப்பான்மை அரசாங்கம் வழங்கிய சலுகையின் காரணமாக ஒரு குடும்பத்திற்கு 6500 ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் ஆணையை மதிக்காமல் மீளவும் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இத்தகைய செயற்பாடு மிகவும் கவலையளிக்க கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும் இம்முறை பாராளுமன்ற தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி காண்பது உறுதியாகும்.
தனது பிறப்பிடமான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிங்க பயந்து குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ களமிறங்குகின்றார். இருந்த போதிலும் குருணாகலில் வாக்கெடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் முடிந்தாலும் கூட அவரினால் அங்கு வாக்களிக்க முடியாது. அவர் மெதமுலனவிற்கே செல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் மீது அச்சம் கொண்டு நாளுக்கு நாள் தோல்வி அடைவதற்கான சந்தர்ப்பத்தை அறிந்துக்கொண்டிருக்கின்றார்.இந்நிலையில் தன்னுடைய கட்சி தோல்வி அடையும் என்பதனை அறிந்ததன் விளைவாக பல்வேறு சலுகைகளை வழங்கப் போவதாக கூறிவருகின்றார்.
சுமார் 20 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தும் கூட சலுகைகளை வழங்க முற்படாத மஹிந்த ராஜபக்ஷ தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கப்போவதாக கூறுகின்றார்.
பல்கலைகழக மாணவர்களின் புலமைபரீசிலை 6000 ரூபாவாக அதிகரிப்பதாக கூறுகின்றனர். எனினும் நல்லாட்சியில் ஏற்கனவே குறித்த சலுகைகளை வழங்கிவிட்டோம். எனவே இனிமேலும் மஹிந்த ஆட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. 20 வருடங்களாக வழங்காத சலுகையை மஹிந்தவினால் இதற்கு பின்னரும் வழங்க முடியாது.
இந்நிலையில் தற்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவின் இனவாத சிந்தனையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். இனவாதம் இல்லாமல் இவர்களினால் அரசியல் செய்ய முடியாது.
இனவாதத்தை தூண்டி அரசியல் செய்வதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாதத்தை கருத்துக்களை கூறி நாட்டை எரித்து நாசமாக்குவதற்கு முனைய கூடாது. ஒன்றுப்பட்ட இலங்கைக்குள்ளேயே அதிகார பரவலாக்கம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.