தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி எட்டுக்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது, கவனத்தை ஈர்க்கும். ஆகஸ்ட் ஆறாம் திகதிக்குப் பின்னர், ரிஷாட் பதியுதீன் குற்றமற்றவர் என்பதை அவர்களே சொல்வார்கள். பலமிக்க மக்கள் ஆணையை இதற்காக வழங்குங்கள்.
ஆயிரம் வருடகாலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த இந்த நாட்டில், எம்மை கொச்சைப்படுத்த நினைக்கின்றார்கள். எமது சமூகத்தின் அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கும் இவர்களின் சூழ்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது. இனவாதமற்ற, நல்லிணக்கத்துடன் கூடிய ஆட்சி மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக நீங்கள் அனைவரும் அறிவுபூர்வமாக சிந்தித்து, தொலைபேசிச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
அத்துடன், சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி தேர்தலின் போது, 63 சதவீதமான வாக்குகளைப் பெற்று, 225 உறுப்பினர்களில் 101 ஆசனங்களையே நாடாளுமன்ற தேர்தலின் போது பெற்றார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய 52 வீதமான வாக்குகளைப் பெற்றார். நாடாளுமன்றில் 80 தொடக்கம் 90 வரையான ஆசனங்களையே அவர்களால் பெறமுடியுமே தவிர பெரும்பான்மை ஆசனம் பெற முடியாது” என்றார்.