Breaking
Thu. Nov 14th, 2024

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முனைகின்றன. எனினும், இந்த அரசாங்கத்தினால் இனவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரிவினைவாதத்தைத் தூண்டி ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாகக் கூறி பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. இது தொடர்பில் வினவியபோதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறுகையில்,

எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராகவும் செயற்படுகிறார்கள். எனவே, அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாட்டில் மூண்ட முப்பது வருடகால யுத்தத்தினால் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அத்தலைவர்களுக்கு அச்சமூகம் பற்றி அக்கறை காட்டுவதற்கான உரிமை உண்டு.

தமிழ் சமூகம் 30 வருட கால ஆயுதப் போராட்டத்தினால் தங்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முயற்சித்தனர். இருந்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை. எனவே, யுத்தத்திற்குப் பின்னரான தற்போதைய சமாதான சூழலில் ஜனநாயக ரீதியில் அதனைப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கின்றனர். அது அவர்களின் ஜனநாயாக உரிமையும்கூட.

அத்தலைவர்கள் தமிழ் சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடில் சிங்கள மக்களை ஒன்றுசேர்த்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் இனவாத அமைப்புகள் கூறியிருப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது பிற்போக்கான முடிவாகும். அவ்வாறு சிங்கள மக்களை இணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மீண்டும் நாட்டில் இனவாதத்தைத் தூண்டி கலவரத்தை ஏற்படுவதற்கு பின்னணியாக அமைந்துவிடும்.

பொதுபலசேனா, சிங்கள ராவய மற்றும் ராவணா பலய போன்ற அமைப்புகள் பற்றி அனைவரும் நன்கறிவர். அவை தமது சுய அரசியலுக்காக செயற்படும் அமைப்புகளாகும். அந்த அமைப்புகளின் முன்னெடுப்புகளினால் கடந்த ஆட்சியில் இந்த நாடு சின்னாபின்னமானது. அதனால்தான் மக்கள் அனைவரும் இன, மத பேதங்களுக்கப்பால் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர்.

அத்துடன், பெரும்பான்மை சமூகமும் குறித்த இனவாத அமைப்புகளை நிராகரித்துள்ளன. அதனால்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பு போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டது. ஆகவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட அவ்வமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவரையும் வடமாகாண முதலமைச்சரையும் கைது செய்யுமாறு முறையிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

நாடு மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் தற்போது அபிவிருத்திப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் இனவாதக் கருத்துகளைப் பரப்பி நாட்டைத் துண்டாடுவதற்கு இந்த அரசாங்கத்தில் இடமளிக்கப்பட மாட்டாது. எனவே, குறித்த அமைப்புகள் கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுத்த இனவாத செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கத் தயாராகுமாயின், அவ்வமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பின்நிற்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post