Breaking
Wed. Dec 25th, 2024

இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள். கடந்த அரசாங்கத்திற்கு நடந்தது இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு படிப்பினை என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சர்ஜான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் அரசியல்வாதிகளாக விரும்பி வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகளாக வருவோம் என்று நினைத்தவர்களும் அல்ல.

அரசியலைப்பற்றி சிந்திக்க முடியாத காலத்தில் எங்களுடைய மக்களின் கண்ணீரும் கம்பளையுமே எங்களை அரசியலுக்குள் தள்ளியது.

ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் அது தொடர்பாக கட்சிகள் தீர்மானம் எடுத்த போது நாங்கள் நிம்மதியாக இருக்கவில்லை.

இந்த நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஆதரிப்பதா அல்லது எங்களுக்காக பல அபிவிருத்திகளை செய்த அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதா என்ற கேள்வி எங்கள் முன்னால் வந்தது.

பெருந்தலைவர் அஸ்ரப்பின் காலத்தில் கூட ஒற்றுமைப்படாத இந்த சமூகம் அல்லது இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் ஒற்றுமைப்படாத சமூகம் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர் யார் என்று பார்க்காமல் வெற்றிலைச்சின்னத்திற்கு எதிராக என்ன சின்னம் என்று கூட பார்க்காமல் ஒற்றுமைப்பட்டுக்கொண்டது.

அது எதற்காக நிம்மதியாக வாழ வேண்டும், மதக்கடமைகளில் யாரும் கைவைக்க அனுமதிக்க கூடாது, எங்களுடைய வாழ்வுரிமையில் கடந்த ஆட்சியாளர்களது காலத்தில் நடந்த அநியாயம் நடக்ககூடாது.

தம்புள்ளையில் இருந்து கிராண்பாஸ் வரையான பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமை, அளுத்கமையில் அப்பாவி இளைஞர்கள் இரண்டு மூன்று பேர் கொல்லப்பட்டமை என்ற சம்பவங்கள் இடம்பெறும் போது கேட்பார் யாரும் இன்றி இருந்தபோது கையை ஏந்தியவர்களாக ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்.

அப்போது யார் போனாலும் இவர்கள் போகமாட்டார்கள் என்று செல்லப்பட்ட காலத்தில் எங்களுடைய கட்சியும் முடிவெடுத்து நாமும் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக சென்றோம். அப்போது நாங்கள் பணம் கேட்கவில்லை, வேறு எதைம் கேட்கவில்லை.

கேட்டதெல்லாம் இந்த நாடு சுதந்திரமடைவதற்கு தமிழ், சிங்கள, முஸ்லீம் தலைமைகள் ஒற்றுமைப்பட்டோம். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் தனி நாடு கேட்டு போராடினார்கள்.

தெற்கில் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் தரித்து ஆட்சியை பறிப்பதற்கு போராடினார்கள். ஆனால் எங்கள் சமூகம் ஆயுதத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஜனநாயகத்தை நம்பிய சமூகம். அதனால் பல உயிர்களை பலி கொடுத்தோம். பல சொத்துக்களை பறிகொடுத்தோம். பல வருடங்கள் அகதிகளாக கையேந்தி வாழும் துன்பியல் நிலைய அனுபவித்தோம்.

அப்படிப்பட்ட இந்த சமூகம் சிங்களவர்களோடும் தமிழர்களோடும் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றது. சகோதரர்களாக வாழ ஆசைப்படுகின்றோம். அந்த நிலையை உருவாக்குங்கள் என கேட்டோம்.

ஒரு நாசகார கூட்டம் சிங்களவர்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு பல உயிர்கள் பலியான பின்னர் இந்த சமாதானத்தை அனுபவிக்கும் ஓரிரு வருடத்திற்குள் மீண்டும் இன ரீதியான கலவரத்தை உருவாக்கி இரத்த ஆறு ஒடுவதற்கு விளைகின்றது.

கடந்த அரசு இதனை கட்டுப்படுத்தவில்லை. சட்டத்தை நிலைநாட்டவில்லை. இந் நிலையில் எங்களுடைய உரிமையை அனுபவிக்க எங்களது தொழிலை செய்ய, மதத்தை வழிபட, கல்வியை கற்பதற்கும் சமூகம் சார்ந்த சில விடயங்களையும் பற்றி பேசிவிட்டே நாம் அரசுக்கு ஆதரவளிக்க சென்றோம்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட நல்லாட்சியிலும் அதே நிலை ஒரு சில ஆசாமிகளினால் அல்லது ஒரு சில நாசகார சக்திகள் படம் எடுத்து ஆடத்தொடங்கியிருக்கின்றார்கள்.

இந்த ஆட்டத்தை ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாமல் ஆக்கி இந்த நாட்டில் இருக்கின்ற சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நல்லதொரு படிப்பினை இந்த நாட்டில் உள்ளது. 10 வீதம் என்ற எமது சமூகத்தை எண்ணிப்பார்த்தார்கள். எங்கள் வாக்கு முக்கியமில்லை என்று பார்த்தார்கள்.

அன்றைய அரசுக்கு கிடைத்த பரிசும் என்னவென்று தெரியும். எனவே இந்த நல்லாட்சியில் நாங்கள் நாடு கேட்கவில்லை. அரசியல் அமைப்பை மாற்றுங்கள் என்று போராடவில்லை.

தேர்தல் முறையை மாற்றுங்கள் என்று போராடவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியை இல்லாது ஒழித்து நிறைவேற்று பிரதமர் முறையை கொண்டு வாருங்கள் என்று நாங்கள் கேட்டவில்லை. எங்களுக்கு அது அல்ல பிரச்சனை. எங்களுக்கு தேவை நிம்மதியே.

இந்த அமைச்சுப்பதவிகள் என்பது தற்காலிகமானது. இந்த அதிகாரங்கள் என்பது தற்காலிகமானது. இந்த பதவிகளுக்காக சமூகத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம். விலைபோகவும் மாட்டோம்.

கொட்டில் வீடுகளை கல்வீடுகளாக கொடுத்த எனக்கு கிடைத்த தண்டனை எனது கொடும்பாவியை செய்து செட்டிகுளத்திற்கு முன்னால் அந்த இனவாத அரசியல்வாதிகள் செருப்பால் அடித்து எனது உடம்பை எரித்து சாதனை படைத்தார்கள். சாலம்பைக்குளம் என்பது 25 வருடம் அனுராதபுரத்தில் அகதி முகாமில் வாழ்ந்த சமூகம். இதுதான் எனக்கு தந்த தண்டனை.

எங்களுடைய பிரச்சினை பேசப்படவேண்டும். உள்ளத்தால் பேசப்படவேண்டும். உண்மையாகவும் சமுதாய உணர்வோடும் பேசப்பட வேண்டும்.

கைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டு நான் சிலாவத்துறையில் கைத்தொழில்பேட்டை வேண்டும் என்று கேட்டேன். கடிதம் அனுப்பினேன். மன்னாரில் ஒன்றை அமைத்தேன்.

முல்லைத்தீவில் ஒன்றை அமைக்கப்போகின்றேன். மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் அமைக்கின்றேன். அந்தவகையில் வடக்கில் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரேயொரு பிரதேச செயலகம் முசலி பிரதேச செயலகம்.

அந்த இடத்தில் 4 வருடங்களுக்கு முன்னர் கைத்தொழில் பேட்டைக்காக 25 ஏக்கர் காணியை ஒதுக்கி வைத்தேன். அதை கேட்ட போது சிலாவத்துறை சுற்றுலாத்துறையை மேம்படுத்தக்கூடிய பிரதேசம்.

எனவே அங்கு கைத்தொழில் பேட்டையை அமைக்க முடியாது அதனை வேறு பிரதேசத்திற்கு மாற்றுங்கள் என ஒரு கல்விமான் முன்னாள் பிரதம நீதியரசர் தற்போதைய முதலமைச்சர் 3 மாத்திற்கு பின்னர் கடிதம் அனுப்புகின்றார். அவ்வாறெனில் எப்படி சேர்ந்து வாழ முடியும்.

எப்படி அவர்கள் எங்களை அணைக்கமுடியும். நாங்கள் தமிழ் சமூகத்துக்கு விரோதிகள் அல்ல. தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரத்திற்கு நீதிவேண்டும். உள்ளத்தால் பேசுங்கள். பிச்சைக்காரனின் புண்ணைப்போல காட்டி பிச்சை எடுக்கும் பயணத்தை நிறுத்துங்கள்.

உண்மையை பேசுங்கள். நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது கட்சியை பல மாவட்டங்களிலும் உள்ள மக்கள் ஏற்று பாராளுமன்ற உறுப்பினர்களை தந்துள்ள நிலையில் ஏதோ ஒரு கட்சியுடன் பேசி இந்த நாட்டில் இனப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று நினைக்கின்றார்கள்.

எங்களுடன் இந்த வடக்கு கிழக்கை பற்றியோ மீள்குடியேற்றம் பற்றியோ வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சனைகள் பற்றியோ ஒரு நிமிடம் கூட பேசவில்லை.

காணி அதிகாரம், கல்வி அதிகாரம், சுகாதார அதிகாரம், நீர்ப்பாசன அதிகரம் எல்லாம் வந்து விட்டது என சொல்கின்றவாகள் ஒருநாளாவது எம்மை அழைத்து பேசினார்களா. பேசவில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை ஒரு மேசையில் இருந்து பேசுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம். மாகாண சபையோடு பேசுவதற்கு நாங்கள் விருப்புகின்றோம்.

கிழக்கில் சிறந்த மாகாண சபை இருக்கின்றது. எல்லோருமாக இருந்து பேசவேண்டும். அதுதான் நிரந்தர தீர்வை தரும். இந்த அசுடன் இருக்கும் நட்பு காரணமாக வேறு சமூகத்தை விட்டுவிட்டு பேசி எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது என தெரிவித்தார்.

By

Related Post