Breaking
Sun. Dec 22nd, 2024

-M.M.A.Samad –

இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த – சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனையவர் வந்தேறு குடிகளல்ல. அவர்களும் ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்;. இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியவர்கள். அவர்களால் இத்தேசம் மாண்பு பெற்றிருக்கிறது.

இதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தம். அவர்கள் அனைவரும் சகல உரிமைகளும் பெற்று இம்மண்ணில் வாழ்வதற்கு கௌரவமானவர்கள். ஆனால், அந்தக் கௌவரம் கிடைக்கப்பெறுவதை இனவாத சக்திகளின் செயற்பாடுகள் தடுத்துக்கொண்டிருக்கிறது.

கடும்போக்காளர்களின் மனநிலை
பெரும்பான்மை பௌத்த-சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சிறுதொகையினரான இனவாதக் கடும்போக்காளர்கள் இந்நாட்டின் சொந்தக்காரர்களும் முன்னுரிமைக்குரியவர்களும நாங்கள்தான்; என்ற மனப்பாங்கிலும் ஏனைய இனத்தினர் இந்நாட்டின் குடியேறிகள் என்ற மனநிலையிலும் உள்ளதுடன் நீ;ண்ட காலமாகச் சொல்லியும் செயற்பட்டும் வருவதையும் காண முடிகிறது.

பௌத்த சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமத்துவத்துடனும், சகவாழ்வுடனும் வாழ வேண்டும். வாழும் உரிமையும் அவர்களுக்குண்டு என்று பேசிவருகின்ற இக்கால கட்டத்தில், இந்நாட்டின் தேசிய இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இனவாத சிந்தனை கொண்ட பௌத்த சிங்கள கடும்போக்காளர்களும் சில அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக நச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சகலவற்றுக்கும்; உரித்துடையவர்கள் நாங்கள் என்ற மனப்பாங்கு கொண்ட இச்சிறுதொகையினரின் எண்ணிக்கையை இனவாதம் எனும் ஊக்க மருந்தேற்றி அதிகரிக்கும் செயற்பாட்டில், பெரும்பான்மையினத்தின் சில அரசியல்வாதிகள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையவர்கள் தங்களது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக கங்கணம்கட்டிக்கொண்டு; செயல்களில் இறங்கியிருப்பதையும், இனவாத ஊக்கமருந்தேற்றப்பட்ட கடும்போக்காளர்கள்; அவர்களின் இலக்குகளை நோக்கி தங்களது நடவடிக்கைகளை நகர்த்திக் கொண்டிருப்பதையும், அத்தகைய அரசியல்வாதிகளினதும் கடும்போக்காளர்களினதும் நெருக்குவாரச் செயற்பாடுகளுக்கு, நாகரீகங்களை அநாகரியங்களாக அரங்கேற்றி அவற்றைச் சந்தைப்படுத்தி வயிற்றுப்பிழைப்பை அதிகரித்துக்;கொண்டிருக்கும் இனவாத ஊதுகுழல்களான சில ஊடகங்களும் பக்கபலமாக வகிபங்கு வகித்து வருவதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

இந்நாட்டில் வாழும் இரு சிறுபான்மை இனங்களும் அவர்களின் வளர்;ச்சியும் பேரினவாதத்தின் கழுகுக்கண்களை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டுக் குத்திக்கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சமூகம் கல்வியில் முன்னேறிக் காணப்பட்டதொரு காலகட்டத்தில் அச்சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, உரிமைகளை மறுத்து அப்பாவி இளைஞர்களை ஆயுதப்போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது இந்த பேரினவாத கடும்போக்காளர்களின் இருண்ட மனப்பாங்காகும்.

வடக்கிலும், கிழக்கிலும் தொன்றுதொற்று ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களை ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு நோக்கச் செய்தும,; விட்டுக்கொடுப்புக்களையும் புரிந்துணர்வுகளையும் இல்லாமலாக்கியும் தமிழனா முஸ்லிமா என்று சிந்திக்கச் செய்ததும் இந்த இனவாத சக்திகள்தான்.
தெற்கில் ஆண்டாண்டு காலம் நல்லிணக்கத்துடன் வாழும் சிங்கள – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குழைத்ததும் இந்த பௌத்த சிங்கள கடும்போக்காளர்களும் இனவாத மனநிலைகொண்ட வக்குரோந்து அரசியல்வாதிகளும்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை 30 வருட கால அழிவுகளைச் சந்திக்கச் செய்து சிரித்து மகிழ்ந்த கடும்போக்காளர்கள், அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களின் கலை, கலாசார, மதப் பண்பாட்டு விழுமிய வாழ்க்கை முறையிலும், ஏனைய கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களிலும் வேண்டுமென்றே மூக்கைநுளைத்தது மாத்திமின்றி, அவை தொடர்பான தப்பபிராயங்களையும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி அம்மக்களை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் தொடர்பான நேர்சிந்தனைகளை அம்மக்களிடமிருந்து இல்லாமல் செய்திருக்கிறார்கள். இதனால், பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான எதிர்மறை சிந்தனைகள் வளர்ந்து வருவதை பெரும்பான்மை சமூகம் சார்ந்த சமூக வளைத்தளங்களில் பதிவேற்றம்படும் கருத்துக்களிலிருந்து ஊகித்துக்கொள்ள முடிகிறது.

இனவாதமும் சிறுபான்மையும்
சுதந்திரத்திற்கு முற்பட்ட 1915ஆம் ஆண்டு முதல் இன்று வரை பேரினவாதம் முஸ்லிம்களை காலத்திற்குக் காலம் துரத்தித் துவசம் செய்திருக்கிறது. இருப்பினும், அதன் துரத்தல் வெறிபிடித்தது பொதுபலசேன எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 2012ஆம் ஆண்டின் பிற்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஹலால் உணவில் கைவைத்த கடும்போக்காளர்கள்; முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் பூர்வீகப் பூமிகளின் பெயர்களையும் கூட அகற்றச் சொல்லிக் கூக்குரல் இட்டனர்.

சட்டமும், சட்ட ஆட்சியும் நடைமுறையில் இருந்தும் கூட, இந்நாட்;டின் சிறுபான்மை மக்களை தொடர்ச்சியாக நெருக்குவாரப்படுத்தி வரும் இத்தகைய கடும்போக்காளர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாமல் போவது எதற்காக? சட்டம் அதன் பொறுப்பை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாது எந்தக் காரணங்களின் அழுத்தங்களினால்; என்பது சமகால சிறுபான்மை சமூகங்களின் நாளாந்தக் கேள்விகளாக மாறியுள்ளன.

முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாழ்வியலில் கடும்போக்காளர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி உணர்வுகளோடு உளவியல் யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறார்கள. இதனால் முஸ்லிம்களின் ; பொறுமை சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை நோக்கி வரும் நெருக்குவாரங்களை யாரிடம் போய்ச் சொல்வது என்ற மனநிலையை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. இருப்பினும், பொறுமையிழக்காமலும், நிதானத்துடனும் ராஜதந்திர ரீதியாகவும் இவற்றுக்கு முகம்கொடுப்பதே அறிவார்ந்த சாணக்கியமாகும்..

ஒரு தனிநபரின் அல்லது ஒரு சமூகத்தின் உரிமைகள் எங்கெங்கெல்லாம் மறுக்கப்படுகின்றனவோ அங்கெங்கெல்லாம் நிம்மதியிழந்த சூழல் காணப்படுவதை உலகளாவிய ரீதியில் காணமுடிகிறது. இந்நாடும் அந்நிலைக்குத்தள்ளப்பட்டு 30 வருட காலம் யுத்த பேரழிவைச் சந்தித்திருக்கிறது. யுத்தம் நிறைவடைந்து சுதந்திரக் காற்று வீசிக்கொண்டிருக்கும் சூழலில் சகவாழ்வுக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும், நிரந்தர அமைதிக்கான தீர்வுகளுக்;குமாக முன்மொழிவுகளும். செயற்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுக்கொண்டு வரும் சமகாலத்தில், இனவாத மனப்பாங்கு கொண்ட கடும்N;பாக்களர்களின் நெருக்குவாரத் துரத்தல் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

கடும்போக்காளர்களும் அவர்கள் சார் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களின் 60 வருட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடக் கூடாது என நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைப் பரிமாறியும் செயற்பட்டும் வருவதுடன்; முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கி அவர்களின் இருப்பிடங்களையும் கேள்விக்குறியாக்கும் செயல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்
சட்டமும் நீதியும் தூங்காத நிலையில் மாவனல்லையிலும், அளுத்தகமையிலும் முஸ்லிம்களின் பெருளாதாரத்தை அழித்தொழித்த இனவாத சக்திகள், தற்போது வில்பத்துவை அண்டிய பிரதேச முஸ்லிம்களின் பூர்வ பிரதேசங்களிலிருந்து விரட்டியக்க முயற்சித்திருக்கிறார்கள். அதற்குசார்பாக இந்நல்லாட்சி அரச இயந்திரங்களும் பச்சைக்கொடி காட்டியிருப்பதை எண்ணி முஸ்லிம்கள் பெரும் வேதளை அடைந்திருப்பதோடு இந்நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுவிட்டதொரு மனநிலையில் ஆதங்கங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வில்பத்தும் முஸ்லிம்களும்
தமிழ், முஸ்லிம் மக்களின் நலனுக்காக அச்சமூகங்களிலிருந்து எவரெல்லாம் முன்வந்து யதார்த்தத்துடன் அம்மக்களுக்காக செயற்பட்டார்களோ, குரல்கொடுத்தார்களோ அவர்களையெல்லாம் இனவாத சக்திகள்; துரத்தி துவசம் செய்திருக்கிறது. பலர் மண்ணுக்கு காணிக்கையாக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் முகவரி இழந்திருக்கிறார்கள்.

அந்தவகையில,; வடபுல முஸ்லிம் மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் அமைச்சர் றிஷாட் பதியூடினையும் இனவாதமும் அவ்வினவாதத்தை ஊதிப்பெருப்பிக்கும் ஊடகங்களும் துரத்திக் கொண்டிருப்பதை குறிப்;பிடாமல் இருக்க முடியாது.

வில்பத்து வனப்பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் வாழும் வடபுல முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது வெறுமெனே அப்பிரதேசத்தைச்சார்ந்த அமைச்சரினதோ அல்லது அப்பிரதேச மக்களினதோ பிரச்சினையாக மாத்திரம் கருதப்படலகாது. இது ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் சமூகப் பிரச்சினையாக நோக்கப்படுவது அவசியமாகும்.

சிரியாவிலோ, ஈராக்கிலோ, மியன்மாரிலோ முஸ்லிம்கள் கொல்லப்படும் போதும,; அங்கவீனமாக்கப்பட்டு அகதிகளாக்கப்படும்போதும், நாடு கடத்தப்படும்போதும், அவர்கள் நம் முஸ்லிம் சகோதரார்கள் என்பதற்காக அமைதிப்போராட்டங்களையும் நடாத்தி அறிக்கைகளையும் விடும் நமது; அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் ; 26 வருடங்களாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த பின் சொந்த மண்ணில் வந்து குடியேறிய மக்களை, அந்த மண்ணை வன ஜீவராசிகளின் வலயம் என்ற பெயரில் கபளீகரம் செய்யப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பதற்கு ராஜதந்திர ரீதியில் இதுவரை எத்தகைய முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் எத்தனை அரசியல் தலைவர்கள் இதுதொடர்பில் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு எந்த ஊருக்கு வழங்குவது என்ற கயிறிழுத்தல் போட்டியில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள், அதற்காக நாளுக்குநாள் கூட்டங்களை நடாத்தும் தலைமைகள் வடபுல அப்பாவி முஸ்லிம் மக்களின் பூர்வீக பிரதேசத்தை பறித்தெடுப்பதற்கு முயற்சிக்கும் இவ்வேளையில் அது தொடர்பாக உரிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக, இப்பிரதேசத்தின்; யதார்த்த நிலையை தெளிவுபடுத்துவதற்காக கட்சி, கொள்கை, பிராந்திய, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து செயற்படுவதற்கு ஏன் முனையவில்லை.

குறைந்தபட்சம் இனவாதிகளினாலும் இனவாதத்துக்கு துணைபோகின்ற ஊடகங்களினாலும் வில்பத்துப் பிரதேசம் தொடர்பில் மூளைச் சலவைசெய்யப்பட்டுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களை தெளிவுபடுத்துவதற்காக அவர்களது தொலைக்காட்சிகளினூடாக பணம்செலுத்தியாவது நேரடி அல்லது பதிவு செய்யப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சியை ஏன் ஒளிபரப்புச் செய்ய்த முடியாதுள்ளது. முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பிலும் முஸ்லிம்கள் வாழும,; வாழ்ந்த பூர்வீக பிரதேசங்களின் வரலாறு தொடர்பிலும் ஏன் தெளிபடுத்த முடியாதிருக்கிறது. வாக்குகளுக்கும் அதிகாரப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் மாத்திரமாக மக்களும் பிரதேசங்களும் தேவை என்று ஒவ்வொரு முஸ்லிம் அரசியல் வாதிகளையும் நோக்கி மக்கள் கேள்வி கேற்ப ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இந்நிலையில், பேரினவாதக் கடும்போக்களர்களின் செயற்பாடுகள் பலம் பெறவும் பலவீனமடையவும் காரணமாக இருப்பதும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்குள்ளும் இரு சமூகங்களுக்கிடையிலுமுள்ள வேற்றுமைகள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாதபோதிலும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண வேண்டிய தேவையை இனவாதத்தின் செயற்பாடுகள் வலியுறுத்துவதாக அமைகிறது.

இன ஒற்றுமைக்கான காலம்
ஒன்றுமை என்பது ஓரு பேராயுதம். எந்தவொரு சமூகமோ அல்லது சமூகங்களோ ஒற்றுமையுடன் தங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோதுதான் எதையும் சாதித்திட முடியும். ஒன்றுபட்டு செயற்பட்டால் சாம்ராஜ்யங்களையும் உருவாக்கலாம் சரித்திரங்களையும் படைக்கலாம். அனால்தான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று நம்முன்னோர் மொழிந்துள்ளனர்.

இலங்கையை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு, இந்நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திட செய்த இந்நாட்டுப்பட்டாளர்கள்; இன, மத, மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு சுதந்திரத்துக்காகப் போராடியதன் பயனாகவே இந்நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கை உருவாகுவதற்கும் ஒற்றுமையே பேராயுதமாக அன்று பயன்படுத்தப்பட்டது.

ஆனால், அந்த ஒற்றுமையைச் சீர்குழைத்து இனவாதம் தமக்கு ஏற்றால்போல் சமூகங்களைப் பிரித்து வைத்திருக்கிறது, இனவாத கடும்போக்காளர்கள் ஒரு புறம் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கக் கூடாது என்று செயற்படும் அதேசமயம் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழக் கூடாது என்ற மனநிலையில் செயற்படுவதைக் அவதானிக்க முடிகிறது.

இதனால் இவ்விரு சிறுபான்மை சமூகங்களுக்கிடையே பேரினவாதத்துக்கெதிரான ஒற்றுமையின் அவசியம் உணரப்படவேண்டியதொன்றாக நோக்கப்படுகிறது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்திற்கும் பொதுவான விடயங்களில் இரு சமூகத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் நலனை நிறைவேற்றுவதற்காக செயற்படும் மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது.

தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் விடயத்தில் குறைக்கண்டு அவற்றை விமர்சனம் செய்து வெற்றுக்கோஷங்கள் கொண்ட ஊடக அறிக்கைகளை விட்டு இரு இனங்களுக்கிடையிலும் சந்தேகங்களை உருவாக்கி ;சிறுபான்மை சமூங்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி இனவாதக் கடும்போக்காளர்களை பலப்படுத்தும் முயற்சிகளிலிருந்து விடுபடுவது காலத்தின் அவசியமாகவுள்ளது

இந்த அவசியத்திற்கான மனமாற்றம் இரு சமூகங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வாக்குகளைப் பயன்படுத்திய தமிழ் பேசும் சமூகம், தங்களுக்குள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முன்வர வருவதோடு கடும்போக்கு இனவாதிகளினால் சிறுபான்மை சமூகத்தின் நலன்கள் கேள்விக்குறியாக்கப்படுகின்ற சூழலில் அவற்றிற்கு எதிராக ஒன்றிணைத்து செயற்படுவதற்கும் இரு சமூகமும் முன்வர வேண்டிய தேவையுள்ளது.
ஏனெனில், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியத்தை முறுக்கேறியுள்ள இனவாதத்தின் செயற்பாடுகள் வலியுறுத்தி வருகிறது. இனவாதிகளின் செயற்பாடுகளை முறியெடுக்க இந்நாட்டில் வாழும் நல்லுள்ளம் படைத்தவர்கள் ஒன்றுபடுவது காலத்தின் அவசியமாகும்.
(விடிவெள்ளி – 05.01.2017)

By

Related Post