இனவாதிகள் கூட்டுச் சேர்ந்துள்ள அணியை ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார்.
சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இன்று காலை (04) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது,
சிறுபான்மை மக்களை “வந்தான் வரத்தான்” எனக் கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம்புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். கடந்த ஒரு தசாப்தகாலமாக இனவாதிகள் சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்துகின்றனர். கொச்சைப்படுத்துகின்றனர். மதக்கடமைகளுக்கு தடைவிதிக்கின்றனர். மதத்தலங்களை உடைக்கின்றனர்.எங்களை தீவிரவாதிகளாகவும், இனவாதிகளாகவும் சித்தரித்து இந்த நாட்டில் பெரியபிரளயம் ஒன்றை கிளப்பிவருகின்றனர். சிறையில்வாடும் தமிழ் இளைஞசர்களை விடுவிக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தால் அதனை இனவாதமாக பெரும்பான்மைச்சமூகத்தில் காட்டுகின்றனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத்தருமாறு கேட்டால் அதுவும் அவர்களால் இனவாதமாக பார்க்கப்படுகின்றது. நாங்கள் எவருக்கும் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழவேண்டிய அவசியம் கிடையாது.தன்மானத்துடனும் சுயகெளரவத்துடனும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு நாம் உரித்துடையவர்கள். அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு நல்ல ஒரு தலைவனாக சஜித் பிரமேதாசவை இனம்கண்டுள்ளோம்.அவரை இந்த நாட்டுமக்கள் ஒரு தேசிய வரலாற்று நாயகனாக இப்போது பார்க்கின்றனர்.
“கடந்த காலங்களில் நடந்ததுபோலன்றி அனைத்து இனத்தவர்களையும் சமமாக நடத்துவேன் எனவும் நிம்மதியுடன் வாழச்செய்வேன்” எனவும் சஜித் உறுதியளித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. யுத்தத்தின் பிறகு முதன்முதலாக துணுக்காய், பாண்டியகுளத்திலேயே மீள்குடியேற்றத்தை பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்தோம். மக்களின் தேவைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் இன்னும் பூரணப்படுத்தப் படாத நிலையில் அவற்றையும் எதிர்காலத்தில் பூர்த்திசெய்யவேண்டி இருக்கின்றது. எனவே இனவாதிகளின் கைகளுக்குள் இந்த நாடு மீண்டும் சிக்கினால் நமது எதிர்பார்ப்புகள் அனைத்துமே ஏமாற்றமாகி விடும் நேர்மையான தலைவரான சஜித்தை ஆதரித்து அவரை வெற்றிபெறசெய்வோம்..
இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,அமைச்சர் ஹக்கீம் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் டி எம் சுவாமிநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,மாந்தை கிழக்கு பிரதேசபை தவிசாளர் நந்தன் உட்பட பலர் உரையாற்றினார்.
ஊடகப்பிரிவு-