Breaking
Sat. Nov 16th, 2024

அமைச்சின் ஊடகப்பிரிவு.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ அத்தனை உச்சக்கட்டத் தடைகளையும் இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (13) அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கி ஒரு துன்பியல் வாழ்வில் நீச்சல் போட்டுக்கொண்டிருக்கின்றது. சமாதானம் முடிவடைந்து நிம்மதியூம் விடிவும் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நாம் தொடர்ந்தும் ஏக்கத்திலேயே வாழ்கின்றோம். எனினும் எமது இலட்சியத்தை நோக்கி அர்ப்பணிப்புக்களுடன் சவால்களுக்கு முகம் கொடுத்து பயணத்தைத் தொடர்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் குடியேற்றம் என்பது கானல் நீராகவும் ஒரு கேள்விக்குறியாகவும் மாறி வருகின்றது. ஒரு சில அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகள் சிலரும் எமது சமூகத்துக்கு வரலாற்றுத் துரோகம் இழைக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரபு நாட்டின் தனவந்தர் சிலரை அழைத்துக் கொண்டு முல்லைத்தீவு மக்களின் வீடில்லாப் பிரச்சினைகளைக் காட்ட அங்கு சென்று அந்த மக்களை சந்தித்தோம். பின்னர் அரச அதிபருடனும் வீடு கட்டுவதற்குத் தேவையான காணி தொடர்பில் உரையாடினோம். இவற்றை எவ்வாறோ மோப்பம் பிடித்த யாழ்ப்பாண பத்திரிகையொன்று அதே நாள் “அமைச்சர் றிஷாட் முல்லைத்தீவில் காட்டை அழித்து வீடுகளைக் கட்ட தனவந்தர்களை அழைத்து வந்திருக்கின்றார்” என கொட்டை எழுத்துக்களில் எமது முயற்சியை ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிட்டனர். அதே போன்று அங்கு வந்திருந்த இனவாத ஊடகங்களும் தமது செய்திகளில் நாங்கள் காட்டை அழித்து வீடு கட்டுவதாக பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஒளிபரப்பின.

 பல்வேறு கஷ்டங்களும் பலமாத முயற்சியின் இந்த தனவந்தர்களை நாம் அங்கு அழைத்து சென்று உதவிகளை பெற்றுக் கொடுக்க முயற்சித்த போதும் மனிதாபிமானமில்லாமல் பிரசாரங்களை செய்கின்றனர். அங்கு ஓர் அடிக்கல் கூட நாட்டாத நிலையில் இவ்வாறு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

வடமாகாண முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்த ஆரம்ப காலங்களில் அவர்களின் கல்வித்தேவைக்காக பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் இங்கு 6 பாடசாலைகளை ஆரம்பித்தோம். 5ஆம் ஆண்டுவரை ஆரம்பிக்கப்பட்ட அன்சாரி வித்தியாலயமும் அதில் ஒன்று. இன்று அப்பாடசாலை 9 ஆம் ஆண்டு வரை தரமுயர்ந்து 450 மாணவர்கள் வரை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றது என அறியும் போது சந்தோசமாக இருக்கின்றது.

புத்தளத்தைப் பொறுத்தவரை இலங்கையின் சூழலியல் பாதிப்புக்களையெல்லாம் தாங்கி தன்னந்தனியாக அனுபவிக்கும் ஒரு மாவட்டமாக அமைந்துள்ளது. சீமெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றினால் பெரும் பாதிப்புக்குள்ளான இந்த மாவட்ட மக்களுக்கு புதிதாக குப்பைப் பிரச்சினையையும் ஏற்படுத்தியுள்ளனர். இது போதாததென்று கற்பிட்டியில் சாலாவ ஆயுதக் கிடங்குகளின் ஆயுதங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கும் ஆயத்தப்படுத்துகின்றனர்.

26 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இலட்சம் வட மாகாண அகதிகளை தாங்கி வாழும் இந்த மாவட்ட மக்கள் அதனால் தமது வளங்களைப் பறிகொடுத்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும் இன்னுமே அந்த மக்களை அரவணைத்தே அன்புடன் வாழ்கின்றார்கள். எனவே இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட மீள் குடியேற்றம் இன்றியமையாததாகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

தில்லையடி அன்சாரி வித்தியாலயத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை திருத்தத்துக்கென ரூபா 12 இலட்சம் ஒதுக்கீடு செய்வதாக கூறிய அமைச்சர், இந்த பாடசாலைப் பாதையை கொங்கிறீட் செய்வதற்கு 35 இலட்சத்தை தருவதாக வாக்களித்தார். இந்த நிகழ்வில் நவவி எம்.பி, அமைப்பாளர் அலி சப்றி, டொக்டர் இல்யாஸ், பொறியியலாளர் யாசீன், தில்லையடி முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஹாஜா அலாவுதீன், முன்னாள் நகர சபை உறுப்பினர் முஹ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.   

Related Post