Breaking
Sun. Dec 22nd, 2024

ஏ எம் எம் முஸம்மில். – பதுளை

    இந் நாட்டு மக்களின் நல்லபிமானத்தை பெற்ற, ஊடகத் துறையில் பல இமாலய சாதனைகளை மேற்கொண்ட, இந் நாட்டின் பல ஆட்சி மாற்றங்களுக்கு அச்சாணியாக செயற்பட்ட ராவய பத்திரிகை சிங்கள ஊடகத்துறையில் ஒரு பிரபலமான பத்திரிகையாகும் . இப்பத்திரிகையின் ஊடகவியலாளரான மஹிந்த ஹத்தக  கடந்த வாரம் “வில்பத்து காடழிப்பு” புரளியின் உண்மைத் தன்மைகளை கண்டறியும் நோக்கில் மரிச்சுகட்டி பிரதேசத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு  கடந்த வார ராவய பத்திரிகையில் விரிவானதொரு அறிக்கையை பதிவிட்டிருந்தார். 

              தமது கட்டுரைக்கு மிகவும் பொருத்தமானதொரு தலையங்கமாக  “வில்பத்து ” பொய் புரளிகளை பரப்பி தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் நாசகார வேலை” என்று தலைப்பிட்டிருந்தார்.

     நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வில்பத்து  விடயத்தில் கொண்டுள்ள தற்போதைய நிலைபாட்டிட்கும் இனவாத அமைப்புகளின் இருட்டடிப்பு செய்யப் பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப் பட்டுள்ள அறிக்கைகளுக்கும், இனவாத ஊடகங்களுக்கும்.  சாட்டையடியாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. 

இக்கட்டுரையின் தமிழாக்கம்

வில்பத்து பொய் புரளிகளை பரப்பி தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் நாசகார வேலை

மஹிந்த ஹத்தக

தமிழில் – ஏ.எம்.எம் முஸம்மில்

     உலக பிரசித்தி பெற்ற மனித உரிமை போராளியும் சிவில் சமூக செயட்பாட்டலரும் அமெரிக்க பிரஜையுமான  “மார்டின் லூதர் கிங்” அவர்கள். தென் ஆபிரிக்க பூர்வீக குடிகளான கருப்பினஅமெரிக்க நீக்ரோக்களுக்கு குடியுரிமையை வழங்க ஒத்துழைக்காத அமெரிக்க அறிஞர் சமூகத்தையும் மேட்டுக் குடியினரையும் நோக்கி கூறிய கூற்றை இங்கே குறிப்பிட வேண்டும்.

    அதாவது “தீயவர்களின் கெட்ட செயல்களை விட, நல்லவர்களின் மௌனமே மிகக் கொடிய விடயமாக கருதுகின்றேன்”. என்று மார்டின் லூதர் கிங் அன்று கூறினார். இன்று வில்பத்து விடயத்தில் தென் இலங்கை ஊடகங்களால் மேற்கொள்ளப் படும் அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை பற்றியும் இப்படித்தான் கூறவேண்டியுள்ளது.

      மனித செயற்பாடுகளின் காரணமாக விரைவில் அழிவிற்குள்ளாகம் காட்டுவளத்தை கொண்ட எம்போன்றதொரு  நாட்டில் காட்டு வளம் பாதுகாக்கப் படாமல் இருப்பது பாரியதொரு குற்றமாகும். மேலும் இதுவொரு கவலைக்கிடமான நிலைமையும் கூட. ஆகவே காட்டுவளத்தை நாசமாக்கும் ஒருவருக்கு சட்டப் படி உயர்ந்த பட்ச தண்டனையை வழங்கவேண்டும். ஆகையினால் வில்பத்துவில் இடம்பெறுவதாக கூறப் படும் வன அழிப்பை நேரடியாக கண்டு அதுபற்றிய உண்மை நிலையை நாட்டுக்கு சொல்ல வேண்டும் நோக்கில் நாம் ஒரு குழுவாக அங்கு புறப்பட்டுச் சென்றோம்.  அங்கு நாம் சென்று நேரடியாக கண்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த சுருக்கமான ஆக்கம் உங்கள் முன் விரிகின்றது.  

 650,000 ஏக்கர் பூமிப்ரதேசத்தில் பரந்துள்ள வில்பத்து சரணாலயம் அனுராத புர புத்தளம் மாவட்டங்களில் அமைந்துள்ளது, இந்த சரணாலயத்தின் வடக்கு எல்லையாக மன்னார் மாவட்டம் அமைந்துள்ள்ளது. இம்மாவட்டங்களினதும், மாகாணங்களினதும் பிரிவு எல்லைகளாக மோதர கம ஆறு எனும் ஆறு அமைந்துள்ளது. இது ஒரு ஆறாக குறிப்பிடப் பட்டாலும் வறட்சிக்காலங்களில் முற்றாக வற்றிப் போகும் ஒரு நீரேரியாகும். எவ்வாறாயினும் நாங்கள் அங்கு செல்லும் போது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த அடர்மழை காரணமாக பாரியளவில் வெள்ளம் பாய்ந்துக் கொண்டிருந்தது. மோதரகம ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள சபத்து பாலம என்றழைக்கப் படும் பாலம் கூட போக்குவரத்திற்கு உகந்ததாக இருக்க வில்லை. இப்பாலத்தின் சில பகுதிகள் நீரினால் அடித்துச் செல்லப் பட்டிருந்தது. அதிலிருந்து சற்று வடக்கு பக்கமாக அமைந்திருந்த கல்லாறு பாலத்தினதும் சில பகுதிகள் நீரினால் அடித்துச் செல்லப் பட்டிருந்தது.         .

      நாங்கள் ஒருவாராக கல்லாறு, மற்றும் மோதர கம ஆறு ஆகியவற்றை கடந்து மோதர கம ஆற்றின் அருகே அமைந்துள்ள வன விலங்கு திணைக்கள காரியாலயத்திற்கு சென்றோம். நாங்கள் செல்லும் போதே அங்கிருந்த ஒரு உத்தியோகத்தர் எங்களை நோக்கி வந்தார். வந்தவர் தற்போதைய விடயங்கள் பற்றி சில கருத்துக்களை எம்மிடம் கூறினார். அவரின் கூற்றுப் படியும் எங்களின் அவதானத்தின் அடிப்படையிலும் ரம்சா ஈர வலயம் என்றழைக்கப் படும் இப்பகுதியில் வில்பத்து வன அழிப்பு என்பதை விட ஒரு புல்பூண்டு கூட அங்கே அழிக்கப் படவில்லை. ஆகவே வில்பத்து வன அழிப்பு என்று கூறப்பட்டு ஊடகத்தால் மேற்கொள்ளப் படும் பிரச்சாரம் சுத்தப் பொய்யாகும்.      

அதேவேளை அவ்வாறனதொரு வன அழிப்பு அங்கே நடைபெறக் கூடிய சாத்தியமும் இல்லை. என்னவென்றால் ஒருபக்கத்தில் வனவிலங்கு பரிபாலன காரியாலயம் ஒன்று அங்கே காணப் படுகின்றது. மறுபக்கத்தில் மோதரகம ஆற்றின் வடக்கே மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பெரும் பகுதி நிலத்தை உள்ளடக்கியதொரு கடற்படை முகாம் காணப் படுகின்றது. ஆகையால் பலவந்தமாக காடழிப்பு நடை பெறுவதற்குரிய வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வாறாயினும்  மோதரகம ஆற்றின் வடக்கு பிரதேசத்தில் காணிகள் துப்பரவாகப் பட்டு புதிதாக வீடுகள் கட்டப் பட்டுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

ஜாசிம் சிட்டிஎனும் பெயரில் கூரைகளுக்கு ஓடுகளை வேய்ந்த வீடுகள் மேற்படி இவ்விடயத்துக்கு  உதாரணமாக உள்ளன. அவற்றில் சில வீடுகளில்  மக்கள் குடியேறி உள்ளார்கள். இன்னும் சில காலியாக உள்ளன. இன்னும் சில இடங்களில் கூரை தகடுகளினால் செய்யப்பட்ட தற்காலிக வீடுகளும் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. கடந்த சில நாட்களில் பெய்த பெரு மழையின் காரணமாக சில வீடுகள் நீரில் மூழ்கி இருந்தன. இதன் காரணமாக வீடுகளில் குடிவாழ முடியாத நிலையும் காணப்பட்டது. குறிப்பிட்ட தகடுகளினாலான வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்பில் மக்களுக்கு பகிரப்பட்டதாக ஒரு அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. அந்த அறிவித்தல் பலகை கூட மழை நீரினால் சூழப் பட்டிருந்தது.

           வில்பத்து வன அழிப்பு சம்பந்தமாக பாரியதொரு புரளி ஏற்பட காரணமாக இருந்ததும் குறிப்பிட்ட இந்த குடியிருப்பு பிரதேசம் ஆகும். இக்குடியிருப்புகளுக்கான நிர்மாண பணிகளின் போது காடுகள் வெட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருப்பது உண்மையே. ஆனாலும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில் வில்பத்து வனத்திற்கும் இக்குடியிருப்பு பிரதேசத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும். இதன் சில பகுதிகள் கல்லாறு பிரதேசத்திற்கு உரியதாக இருக்கலாம். எங்களுடன் கருத்து பரிமாறிய இப்பிரதேச குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்த கருத்தின் படி கடந்த சில காலங்களுக்கு முன் வன இலாகாவிற்கு சொந்தமான பூமிப் பகுதிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு பின் அந்த அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்து விட்டு குடியிருப்பாளர்களை அவ்விடத்தில் இருந்து நகர்ந்து விடுவதற்க்கான அறிவுறுத்தல் வன இலாகாவின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு அப்புறப் படுத்தப்பட்ட தென்னோலையால் வேயப்பட்ட குடிசைகளின் சிகிலங்கள் இன்னும் இங்கே காணப்படுகின்றன.

          முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மரிச்சிக்க்ட்டி என்ற ஊரில் நடைபெற்றதாக கூறப்படும் குடிபெயர்ந்தோர்களுக்கான வீட்டு நிர்மாணப் பணிகள் காரணமாக பாரிய காடழிப்புக்கு காரணமாக உள்ளது என்று கூப்பாடு போடுவார்களுக்கு நாம் சொல்ல விரும்பும் விடயம் என்னவென்றால் இந்த பிரதேசத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பல குக்கிராமங்கள் இருந்துள்ளன என்பதையே. இப்பிரதேச மக்களின் கூற்றின் படி மோதரகம் ஆற்றின் வடக்கில் பாலக்குழி, கரடிக்குழி, மரிச்சிக்கட்டி எனும் மூன்று கிராமங்கள் அங்கே இருந்துள்ளன. இவற்றில் மோதரகம் ஆற்றின் எல்லையாக மரிச்சிக்கட்டி என்ற கிராமம் இருந்துள்ளது. ஜாசின் சிட்டி நிர்மாணிக்கப் பட்டுள்ளதும் இந்த மரிச்சிக்கட்டி என்ற கிராமத்தில் ஆகும். மேற்சொன்ன மூன்று கிராமங்களினதும் பூர்வீக மக்களை 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு புத்தளம் அல்லது மன்னார் போன்ற பகுதிகளில் குடிபெயர்ந்து உள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் இம்மக்கள். மீண்டும் இப்பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்து வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இப்பிரதேசத்திற்கு வருகை தருகையில் சுமார் இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் விட்டுச்சென்ற இப்பகுதியில் பாரிய மரங்கள் வளர்ந்து காடாக மாறியிருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

      ஆகவே, இப்பிரதேசத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் பொழுது இம்மரங்களை வெட்டி துப்பரவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது சாதாரண நிகழ்வே. எமது விஷேட அவதானத்துக்கு உள்ளான மரிச்சிக்கட்டி கிராமம், மரிச்சிக்கட்டி குளத்திற்கு அண்மையில் உள்ள ஒரு ஊராகும். ஆகவே, இங்கு மனிதர்கள் வாழ்ந்தார்கள் அல்லது மக்கள் குடியிருப்புகள் இருந்துள்ளது என்பதை அறிவதற்கோ அல்லது நிரூபிபதற்கோ வேறு சாட்சிகள் தேவை இல்லை. எங்களுடன் கருத்து பரிமாறிய எம். எம். முத்துமுஹம்மத் அவர்களின் கூற்று படி அவரின் காணிக்கான உறுதியை 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி பிரித்தானிய முடியாட்சி நிர்வாகத்தின் அரச உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. இக்காணி உறுதியை எம். எம். முத்துமுஹம்மத் அவர்களின் இரத்த உறவினரான அவரின் முன்னோர் முக்கல்பாவா என்பவர் பெற்றுள்ளார். குறிப்பிட்ட காணி உறுதி தற்போதைக்கும் அவர் கைவசம் உள்ளது. அவ்வுறுதியின் படி அவருக்கு உரித்தான காணியின் பரப்பு மறக்கல் 15 ஆகும். அது தற்போதைய அளவில் சுமார் நான்கரை ஏக்கர் ஆகும். இது இக்கிராமத்திற்கு நீண்டதொரு வரலாறு உள்ளது என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியாகும்.

        அடுத்ததாக எங்களுக்கு காணக்கிடைத்த இன்னுமொரு முக்கிய சாட்சியாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களால் உதாகம தொனிப்பொருளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளாகும். 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ் ஈழ விடுதலை புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது கைவிட்டு சென்ற இந்த உதாகம வீடுகளும் காலத்தின் மாற்றங்களால் காடுகளாக மாறியுள்ளன. இக்குறிப்பிட்ட வடுக்களின் நடுவே பாரிய மரங்கள் முளைத்துள்ளன இவற்றின் கூரைகள் சேதமாகி அழிவுக்குள்ளாகி இருந்தன. இந்த உதாகம வீடுகளுக்கு இதுவரை எவரும் குடிபெயர வரவில்லை. காடு செடிகளுக்கு உள்ளால் புகுந்து உள்நுழைந்த நாங்கள் இந்த வீட்டு திட்டத்துக்கான அடிக்கல் நடுவிழாவில் பதியப்பட்டிருந்த பெயர்ப்பலகையையும் (plaque) கண்டோம்.  குறிப்பிட்ட பெயர்ப்பலகையின் தகவல்களின் படி இவ்வீட்டு திட்டம் பத்து வீடுகளை உள்ளடக்கியதாகவும் 1980 ஜூலை மாதம் 21 ஆம் திகதி, அப்போதைய உள்ளூராட்சி மன்ற அமைச்சராக இருந்த ஆர். பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு மூன்று வருட பூர்த்தி விழா கொண்டாட்ட முகமாக இவ்வீட்டு திட்டம் இப்பிரதேச மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

                யுத்த முடிவின் பின்பு இப்பிரதேசத்திலேயே நாமல்கம எனும் பெயரில் ஒரு குடியிருப்பை உருவாக்கி 85 குடும்பங்களை இப்பிரதேசத்தில் குடியமர்த்தி உள்ளதாக இப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இக்குடியிருப்பில் சிங்கள மக்களை மாத்திரம் குடியமர்த்தி உள்ளது விஷேட அம்சமாகும். இதற்கு புறம்பாக யுத்தத்திற்கு முன்னைய காலத்தில் இங்கே இருந்த முள்ளிக்குளம் எனும் கிராமம் தற்போது இங்கே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான காரணம் முள்ளிக்குளம் கிராமம் இருந்த இடத்தில் தற்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகும். மீள்குடியேற்றத்துக்காக இப்பிரதேசத்திற்கு வரும் இப்பிரதேசத்தின் பூர்வீக மக்களுக்கு இப்பிரதேசத்திற்கு உள்ளேயே பதில் காணிகள் வழங்க வேண்டும் என்பது முக்கிய விடயம் ஆகும். மரிச்சிக்கட்டி கிராமத்தின் மோதரகம் ஆற்றின் அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள இடத்தில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் மையவாடி ஒன்று இருந்துள்ளது. அம்மையவாடியையும் தாம் இழந்துள்ளதாக இப்பிரதேச மக்கள் கூறுகின்றார்கள். அம்மையவாடிக்கு பக்கத்தில் அமைந்திருந்த முகைதீன் ஜும்மா  பள்ளியை இன்றும் காணலாம். இப்பள்ளியும் தற்போது காடுகளால் சூழப்பட்டுள்ளது. மௌலவி எம். தௌபீக் அவர்களின் கூற்று படி 1990 ஆம் ஆண்டில் மரிச்சிக்கட்டி கிராமத்தில் 150 குடும்பங்களே இருந்துள்ளன. பாலக்குழி கிராமத்தில் 75 குடும்பங்கள் இருந்துள்ளன. ஆனால், இருபத்தைந்து வருடங்களுக்கு பின் தற்போது அங்கே 1300 குடும்பங்களாக இவர்கள் வளர்ந்துள்ளார்கள். அன்று பத்து அல்லது பன்னிரண்டு வயதாக இருந்த பிள்ளைகள்  தற்போது திருமணமாகி அவர்களின் பிள்ளைகள் கூட குடும்பங்களாக பரிணமித்துள்ளது இதற்கான மூலகாரணமாகும். மேற்படி குடும்பங்கள் தமது பூர்வீக பிரதேசங்களுக்கு மீள குடியமர வரும் போது மேலதிக காணிகள் தேவைப்படுவது இயல்பானதே.

                  முன்னாள் முசலி பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி (முசலி பிரதேசசபையின் ஆளும் தரப்பாக ஆட்சி அமைத்திருந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகும்). குறிப்பிட்ட இந்த கிராமங்கள் அனைத்துமே வில்பத்து தேசிய வனத்திற்கு வெளிப்பக்கதிலேயே அமைந்துள்ளன. ஆனால்,அநேகமானவர்கள் அவதானம் செலுத்தாத இன்னொரு முக்கிய விடயமான வில்பத்து வனத்தின் மத்தியில் அமைந்துள்ள பல குடியிருப்புகள் ஆகும். புத்தளம் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வில்பத்து சரணாலயத்தினுள் வெள்ளமுந்தல், பளுகஸ்துறை, பூக்குளம் எனும் பெயர்களை மூன்று குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பு வாசிகளும் 1990 யுத்த காலத்தில் இக்கிராமத்தை விட்டு சென்று யுத்த முடிவின் பின் மீண்டும் இவற்றில் குடியமர்ந்தவர்களாவர். அவ்வாறு குடியமர்ந்தவர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை 1300 ஆகும். ஆனால், இக் குடியிருப்புகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு எதிர்ப்பும் வெளிப்படவில்லை. 

                 முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உற்பட்ட பிரதேசத்தில் குடியிருப்புக்கள் விஸ்தரிக்கப்படுவதால் வனப்பகுதி அனுமதி அற்ற நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவது  ஒரு புதுனமான விடயமல்ல. ஆனாலும், இவ்வாறானதொரு விடயம் ஏற்படக்கூடிய பிரதேசம் வில்பத்து தேசிய சரணாலயம் அல்ல. ஆனால், கல்லாறு வனப் பிரதேசத்தில் இது நடைபெற சாத்தியம் ஆக உள்ளது. தெற்கிலிருந்து சென்ற பௌத்த மதகுருக்கள் உற்பட்ட பிரஜைகள் வன அழிப்புக்கு எதிராக சத்தியாக்கிரகன போராட்டம் நடாத்தியதும் இந்த கல்லாறு பாலத்திற்கு அருகிலாகும். விசனத்திற்கு உள்ளாகாத ஆனாலும் வில்பத்து சரணாலயத்தின் எல்லைகளில் வேற்று பிரதேசங்களில் சில இடங்கள் வன அழிப்புக்கு உள்ளாகி உள்ளன. மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் பாரிய மர வியாபாரங்கள் நடைபெறுவதாக ஊரார் சிலர் கூறுகின்றனர். ஆனால்,அவ்விடயங்களை ஆய்வு செய்ய எமக்கு போதிய கால அவகாசம் இருக்கவில்லை.

  இவை சம்பந்தமாக நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்டதொரு இனத்தை மாத்திரம் இலக்கு வைத்து இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்களின் மூலமும் ஆர்ப்பாட்டங்களின் மூலமும் இன குரோதங்கள் மேலோங்குவது தவிர்க்கமுடியாததாகும். இவற்றின் மூலம் ஒரு இனத்தை வேறுபடுத்தி நோக்குவது உள்நோக்கத்தை கொண்ட செயல்பாடாகும். தேசிய ஒற்றுமைக்கு இந்நடைமுறைகள் எவ்வகையிலும் துணை போகாது. மேலும் உயர்பாதுகாப்பு வலயம் அல்லாத இப்பிரதேசத்தை தேவையானவர்களுக்கு சென்று பார்வையிட அல்லது தகவல்களை திரட்ட தேவையான அளவு சந்தர்ப்பம் உள்ளது. அதைத் தவிர்த்து போலியாக கூக்குரல் இடுவது எவ்வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.

Related Post