Breaking
Tue. Dec 24th, 2024
இந்த நாட்டில் மீண்டும் இனவாத சிந்தனைகளை விதைத்து அதன் மூலம் மனித அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியினை மீண்டும்  வெகு விரைவில் கூறுவார்கள் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இனவாதம்,மதவாதம்,பிரதேசவாதங்கள் எமது முன்னேற்றத்தின் தடைக்கற்கல் என்றும் சொன்னார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு வவுனியா பட்டானிச்சூர் வெங்கடேஷ்வரா மஹாலில் இன்று இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் இங்கு கூறுகையில் –
இந்த நாட்டிலும்,வடக்கிலும் வாழும் மக்கள் நிம்மதியுடனும்,அச்சமற்ற நிலையிலும் வாழ வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை நாம் செய்துள்ளோம்.எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு இந்த மக்களுக்கான அபிவிருத்திகள் தொடர்பில் பேசுவதும்,அறிக்கைகள் விடுவது மட்டும் போதும் என்று சிலர் அரசியல் செய்கின்றனர்.வன்னி மாவட்டத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் அரசியல் பிரதி நிதித்துவம் இல்லையென்றால் அபிவிருத்திகள் மக்களை வந்ததைடையாது என்பதை நாம் விளங்கிக் கொண்டதன் பயனாக ஆளும் கட்சியில் இருந்து எமது மாவட்ட மக்களுக்கு பணி செய்கின்றோம்.
எமது மாவட்ட மக்கள் பல தேவைகள் உடையவர்களாக இருக்கின்றனர்.அந்த தேவைகளை இனக் கண் கொண்டு பார்க்க முடியாது,நான் பின்பற்றும் இஸ்லாம் மதம் மனிதர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் சொல்லுகின்றது.இந்த உலகில் மக்களுக்கு செய்யும் நன்மை தான் மறு உலகில் எமது விமோசனமாகும்.
இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 200 பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.16 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த தொழிற்சாலையின் செயற்பாட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நன்மையடையவுள்ளனர்.இதில் இனவாதம் இல்லை என்பதை நாங்கள் தெளிவாக கூறிக்கொள்ளவிரும்புகின்றோம்.
இன்று சிலர் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றனர்.அதற்காக வேண்டி சில ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.வவுனியா மாவட்டத்தில் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பிழையான தரவுகளை சில அரசியல் வாதிகள் வெளியி்ட்டுவருகின்றனர்.நான் தெளிவாக கூறுகின்றேன்.வன்னி மாவட்டத்தில் எந்த வொரு தமிழ் மகனுக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
எமது அரசியல் பயணம் என்பது பாதிக்கப்பட்டு,நிர்க்கதியான சமூகத்தின் தேவையினையும்,விமோசனத்தினையும் அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களின் ஒற்றுமையினை சீர்குலைக்கும் சக்திகளுக்கு ஒரு போதும் எமது மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.

Related Post