Breaking
Sun. Nov 17th, 2024
-எம்.எஸ்.எம்.ஸாகிர்
அம்பாறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக இன நல்லுறவுடன் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு அற்ற நிலையும் இனவிரிசலும் ஏற்படுவதற்கு கடந்த கால போர்ச்சூழல், இயக்கங்கள், குறுகிய சிந்தனையுடைய அரசியல் போக்குகள் என்பன காரணங்களாக அமைந்தன. தற்போது இந்த நிலை படிப்படியாக மாற்றமடைந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகார செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கல்முனை – தமிழ் பிரதேசத்தில் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் கிளைகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை நியூ ஸ்டார் கழக ஆலோசகர் கே.தவசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடர்ந்து பேசிய அவர், கல்முனைத் தொகுதியிலுள்ள தமிழ் – முஸ்லிம் கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று கலந்து காணப்படுகின்றன. இதேபோல இரு சமூகங்களுக்கும் பல்வேறு இடைத் தொடர்புகளைக் கொண்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டு வந்த வரலாற்றையுடைய நாம், மீண்டும் அந்த இறுக்கமான உறவினைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது வில்பத்து விவகாரத்தை திரிபுபடுத்தி அபாண்டங்களைத் தெரிவித்து வருவதை அறிவீர்கள். அவரும் நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் அங்கு வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்ல, தமிழ் – சிங்கள மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். நியாயத்தன்மையைப் புரிந்து கொண்ட பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும், பிரமுகர்களும் அமைச்சரின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். ஒரு சிலர் குறுகிய நோக்கங்களையும், குரோதங்களையும் வைத்துக் கொண்டு தடைபோட்டு வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் யாவரும் ஒரேயணியாக நின்று வாக்களித்ததன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது. இதேபோல் எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு இனவாத செயற்பாடுகளை முறியடிக்க அணிதிரள வேண்டும். எமது கட்சி இதற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நியூ ஸ்டார் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கழக உறுப்பினர்கள் உட்பட பெருந்திராள இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு கட்சிக்கான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டனர்.

By

Related Post