பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இன்றுடன் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்கின்றார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக என்.கே. இளங்கக்கோன் கடமையாற்றி வந்தார்.
1980ஆம் ஆண்டு புதிய துணை பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இளங்கக்கோன் 1982ஆம் ஆண்டில் திறமை அடிப்படையில் துணை பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார்.
பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியிருந்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ள என்.கே. இளங்கக்கோன் பல பொலிஸ் பிரிவுகளின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
2011ஆம் அண்டு பொலிஸ் திணைக்களத்தின் 33ஆம் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பொலிஸாருக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு
சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இன்று ஓய்வு பெற்றுக் கொள்ளும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் பதவியில் இருக்கும் நடாத்தும் இறுதி செய்தியாளர் சந்திப்பில் முற்பகல் 10.00 மணிக்கு பங்கேற்க உள்ளார்.
பின்னர் பிற்பகல் 3.00 மணிக்கு பிரியாவிடையை முன்னிட்டு விசேட பொலிஸ் மரியாதை அணிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் பணியாக நேற்றைய தினம் தமது பிறந்த ஊரான பலங்கொட பின்னபொல பிரதேசத்தில் பொலிஸ் நிலையமொன்றை பெற்றுக்கொடுக்க என்.கே. இளங்கக்கோன் ஆவண செய்திருந்தார்.
இதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவு தொடர்பில் அரசியல்சாசனப் பேரவை ஆராயவுள்ளது. அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட உள்ளார்.