Breaking
Mon. Dec 23rd, 2024

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான தாதியர் தினம் “மாற்றத்திற்கான மாபொரும் சக்தி தாதியர்களே – அவர்கள் தமது விரிவான திறனினூடாக ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகிறார்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச தாதியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965 ஆம் ஆண்டிலிருந்து நினைவு கூறுகிறது. 1953 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இத்தினத்தை தாதியர்/செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965 ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள தாதியர்கள் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

அதேநேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை இத் தாதியர் வாரம் கொண்டாடப்படுகிறது. ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “தாதிமார்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். “தாதியர்கள்” உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார்கள். இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்திய சேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே.

இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது. மறுபுறமாக ‘தாதியார்தினம்’ என்று வரும் போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்.

By

Related Post