Breaking
Mon. Dec 23rd, 2024
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கிடைத்தமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தச் சட்டத்தை செவ்வாய் கிழமை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீத அதிகாரங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. 1999 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த அதீத அதிகாரங்களை நீக்க வேண்டும் எனக் கூறியது.

இந்த அதிகாரங்களை நீக்குவதாக முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும் அதனை நிறைவேற்றவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் அதீத அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று தெளிவாக கூறியிருந்தது.

தனக்கு வாக்களித்த 62 லட்சம் மக்களும் மஹிந்தவுக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டார். அதனால் நாளை 19வது திருத்தச் சட்டத்தை கட்சி பேதமின்றி வாக்களித்து நிறைவேற்றி நாட்டு மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியின் வளமான எதிர்காலத்திற்கு வழியேற்படுத்த வரலாற்று கடமையை செய்ய வேண்டும் என்று பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட சிறந்த சட்டங்களை அமுல்ப்படுத்தும் தேவையை பாடசாலை பிள்ளைகள் கூட பாராட்டுகின்றனர் எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

Related Post