டிசம்பர் 6ம் திகதியான இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரணமாகவே பாபர் மசூதி இடிப்பு தினம் என்றால் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப் பட்டிருக்கும். இப்போது ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தலில் உள்ள பிரதமராக நரேந்திர மோடி உள்ளதால், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியின் முக்கிய இடங்கள் பிரதமர் இல்லம், அலுவலகம் என்று எங்கு நோக்கினும் பாதுகாப்பு படையினர் கண் துஞ்சாது, பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். முக்கிய வழிப்பாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று அத்தனை இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு என்பது டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.