ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின் பாராளுமன்றம் முதன் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்போது, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் விக்ரமசிங்க இன்று உறுதிப்படுத்துவார். சபை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்றுப் பதவியேற்றுக் கொண்டதுடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் பதவியேற்றார்.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பாக நேற்றையதினம் கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்திருந்தனர்.
புதிய பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்துக்காக பொலன்னறுவையைச் சேர்ந்த ஜயசிங்க பண்டார பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 29ஆம் திகதி புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.