நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இன்று (13) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்தார்.
காலநிலை மாற்றம், தொடர் மழை வௌ்ளம் காரணமாக டெங்கு நோய் கூடுதலாக பரவி வருகிறது. இதில் 50 வீதமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் கடந்த ஆண்டில் 29,999 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாண்டில் இதுவரையில் 22,700 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவும் இடங்களை சுத்தப்படுத்தாமல் வைத்திருப்பதன் மூலமே அதிகளவிலான நுளம்புகள் பரவுவதுடன் நோய்களும் அதிகளவில் பதியப்படுகின்றன. இவ்வருடத்தில் 10 இலட்சம் இடங்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், டெங்கு நோய் பரவும் இடங்களாக 02 இலட்சம் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனவே இவற்றினை இல்லாதொழிக்கும் முகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பமாகின்றது. மருதானை ரயில் நிலையத்துக்கருகிலேயே இவ் ஆரம்ப நிகழ்வு நடைபெறும்.