ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே உள்ளன என்ற யதார்த்ததை முஸ்லிம்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. இவ்விரு கட்சிகளும் ஐ.தே.க வுடன் இணைந்தே மைத்திரியை ஜனாதிபதியாக்கின. இரு கட்சிகளும் ஐ.தே.க வுடன் இணைந்தே ஐ.தே.க தலைவர் ரணிலை பிரதமர் ஆக்கின. இந்த நிலையில் மயில் யானையுடன் இணைந்தால் ஹலால், மரம் யானையுடன் இணைந்தால் ஹராமா என சமூகம் கேட்பது அதன் அரசியல் அறிவுக்குறைவை காட்டுகிறது.
இந்த நாட்டு முஸ்லிம் வாக்காளர்கள் 95 வீதம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஐ.தே.க வுக்கு ஆதரவாகவே இருக்கிறோம். நாம் சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரியின் கட்சியுடன் இருக்கிறோம் என்று சொன்னால் கூட, அதுவும் மறைமுகமாக ஐ.தே.க ரணிலுக்கு ஆதரவாகவே இருக்கிறோம். காரணம் சுதந்திர கட்சியும், ஐ.தே.க வும் இணைந்தே நாட்டை ஆட்சி செய்கின்றன.
இப்படி நிலை இருந்தும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் யானையை தூக்கிக்கொண்டு வந்ததை, நாம் கண்டிப்பதற்கான காரணம் என்ன? இது பற்றி உலமா கட்சி பல தடவைகள் தெளிவாக்கியும் இன்னமும் பலருக்கு புரியவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் யானையுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றால், அதன் மூலம் யாராவது பேரின இனவாதி பலம் பெறுவாரா? இல்லை. உதாரணமாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும் தயா கமகே போன்றதொரு இனங்காணப்பட்ட இனவாதி அங்கு இல்லை.
ஆனால், அம்பாரை மாவட்டத்தில், அதுவும் முஸ்லிம்களின் தலை நகரான கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் யானையை கொண்டு வந்துள்ளதன் மூலம் மேற்படி இனவாதியே பலமடைகின்றார்.
கடந்த பொதுத்தேர்தலில் மு.கா, யானையிலேயே தனது வேற்பளர்களை அம்பாறையில் நிறுத்தியது. அதேபோல் மக்கள் காங்கிரஸும் வன்னியில் யானையிலேயே தனது வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனாலும் இவ்விரு பகுதியிலும் யானை வென்ற பின் என்ன நடந்தது? வன்னியில் எந்தவொரு பேரின இனவாதியும் யானை வென்றதால் பலம் பெறவில்லை.
ஆனால், அம்பாறை மாவட்டத்தில் மு.காவும் இணைந்து யானை வென்றதால் மு.கா மூன்று பொம்மை உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதே தவிர, பிரதேசத்தை ஆளும் அதிகாரமிக்கவர்களை பெறவில்லை. இதற்கு மாற்றமாக தயா கமகேயின் முயற்சி மூலமே யானை வென்றதாக காட்டப்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவிக்கு தேசிய பட்டியல் மற்றும் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. தயாவின் உதவியுடன் இறக்காமத்தில் சிலை வைக்கப்பட்டது. கல்முனையில் இருந்த நிறுவனங்கள் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டன. பொத்துவில் முஸ்லிம்களின் காணிகள் கிடைக்க விடாமல் தடை ஏற்படுத்தப்பட்டது. சவூதி வீடுகள் வழங்கப்படுவது தடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்கப்படும் என அகங்காரமாக பேசப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகளை கண்ணூடாக நாம் கண்டதன் காரணமாகவே கல்முனை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை போன்ற முஸ்லிம்களின் பலமிக்க கோட்டைகள், யானையின் கையில் வீழ்ந்தால் அது தயா கமகே என்ற இனவாதிக்கே பலத்தை கொடுக்கும் என்பதாலேயே மிகக்கடுமையாக எதிர்க்கிறோம்.
அத்தோடு டயஸ் போராக்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுக்கும். காரணம், அம்பாறை மாவட்டமே முஸ்லிம்களின் கோட்டையாக இருப்பதால் அங்கிருந்து முஸ்லிம் கட்சிகளின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்தால், முஸ்லிம் தனித்தரப்பு என்ற வார்த்தையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆகவேதான் சொல்கிறோம். இந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் யானைக்கு வாக்களித்து ஏற்கனவே தயா கமகேயினால் அடி வாங்கி நிற்பது போல், நிற்காமல் இந்த சமூகத்தின் விடுதலைக்காக சிங்கள, தமிழ் இனவாதிகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தலைமையிலான அகில இலங்கை .மக்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முயல வேண்டும். அக்கட்சி கல்முனையிலும், சம்மாந்துறையிலும், அட்டாளைச்சேனையிலும், நிந்தவூரிலும், இறக்காமத்திலும் வெல்லும் பட்சத்தில், தயா கமகேயை ரணில் விக்கிரமசிங்க அடித்து விரட்டுவார். அதற்குப்பின் அவர் வாலாட்டுவது கடினமாகிவிடும். இதனை முஸ்லிம்களும் குறிப்பாக புத்திஜீவிகளும் புரிந்து கொள்ள வேண்டுமென உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்,
உலமா கட்சி.
உயர்பீட உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்