Breaking
Sat. Nov 2nd, 2024
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றியை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றியை தடுக்க முயற்சி மேற்கொண்டதாகவும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முயற்சித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தேர்தலில்  வெற்றியீட்டுவதனை தடுக்க இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த சூழ்ச்சித் திட்டத்திற்கு இராணுவத்தினரும் காவல்துறையினரும் உடன்படவில்லை எனவும், அவர்களின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஆணையை உதாசீனம் செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும் திரைக்குப் பின்னால் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சில கட்சி உறுப்பினர்கள் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் அனைத்து இனங்களுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post