Breaking
Thu. Jan 16th, 2025
ஊடகப்பிரிவு
உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு,  சுயகௌரவம் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்த , எம்மால் முடிந்த சிறு தியாகம் ஒன்றுக்கான ஆளுமையும் மனோ நிலையும் எம்மில் ஏற்பட இத்தியாகத் திருநாளாம் புனித ஹஜ்பெருநாள் தினத்தில் உறுதி  பூண்டு பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம். அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கபட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு
இறைதூதர் இப்றாஹீம் நபி அவர்களினதும் அவர்களது குடும்பத்தினதும் தியாகச்செயற்பாடுகளை நினைவு கூறும் இந்நாளில் எமது இஸ்லாம் மார்க்கமும் முஸ்லிம் சமுகமும் உலகம் பூராகவும்   பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளதை நாம் அறிவோம்.
இந்தச் சவால்களை முறியடிக்க ஆங்காங்க சிற்சில தியாகங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவைகள் எமது சமுதாயத்தையும் மார்க்கத்தையும் பாதுகாக்க போதுமானதாக  உள்ளவையாக இல்லையென்ற எதார்த்தத்தையும் நாம் உணரக்கூடியதாக உள்ளது.
உலகளாவிய ரீதியில் வியாபித்திருக்கும் அடாவடித்தனமும் இனவாதமும் கொண்ட எமக்கு எதிரான சக்திகளை முறியடிக்க பிரதேச வாதம், குரோதம் மனக்கசப்பு என்பனவற்றிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் எமக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் நாடுகள் மீதும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளிலும் எமக்கு எதிராக சியோனிச வாதிகளால் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளும் கொடுமைகளும் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரை வியாபித்துள்ளது.
எனவே, இந்த அடாவடித்தனத்திற்கும் அநீதிகளுக்கும் சிறந்த சாட்டையடி வழங்க வேண்டிய அவசர நிலையில் உள்ள எமது முஸ்லிம் சமுகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாத்தையும் சமுகத்தையும் காப்பாற்ற இப்றாஹீம் நபி செய்யத்துணிந்த தியாகங்களை  நினைவு கூர்ந்து , நாமும் எம்மால் முடிந்த தியாகங்களை செய்யவும் அதற்கான மனோ நிலையை இறைவன் ஏற்படுத்தவும் உறுதி பூணுவோம்
புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ஈத் முபாரக்

Related Post