Breaking
Tue. Jan 7th, 2025

பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று மாலை (21) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது, அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.  

இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர சபை உறுப்பினர்களான பாரி மற்றும் லரீப், அமைச்சரின் இணைப்பாளர் முத்து முஹம்மது, மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தாஹிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷர்ரப் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

நாள்தோறும் இனவாத சமூகவலைத்தளங்கள் என்னைப்பற்றி ஏதாவது ஒன்றைப் பின்னி சோடித்து அதனை கார்ட்டூன்கள் வடிவிலும், கொச்சை எழுத்துக்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தி சேறுபூசி வருகின்றன. பல சவால்களுக்கும் தடைகளுக்கும் முகங்கொடுத்து, மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லும்போது இவ்வாறான புதிய பிரச்சினைகளும் எமக்கு இடைஞ்சலாக இருக்கின்றது.

சமூகத்துக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க குறிப்பிட்ட இடத்துக்கோ, பிரச்சினை உள்ள பிரதேசத்துக்கோ சென்றால், அந்தப் பிரச்சினையை என்மீது திருப்பி வேறு வடிவத்தில் என்னைக் குற்றவாளியாக்க சிலர் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர். எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று மிகவும் கபடத்தனமாக பிரச்சினைகளை திசை திருப்பி, என்னை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சதி செய்கின்றனர். போதாக்குறைக்கு இப்போது இயற்கையுடன் தொடர்புபடுத்தி நளினப்படுத்துகின்றனர்.

கடந்தகாலப் போர் ஏற்படுத்திய அழிவுகளும், நஷ்டங்களும், வேதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஐக்கியம் ஆகியவற்றை துருவப்படுத்தி பகைவர்களாக்க இது ஏதுவாயிற்று.

மீள்குடியேறும் போது ஏற்பட்ட காணிப் பிரச்சினை கூட போரின் எச்சங்களே. இனங்களுக்கிடையே உருவான காணிப் பிரச்சினைகளை, எல்லைப் பிரச்சினைகளை முடிந்த வரை தீர்த்து வைத்திருக்கின்றோம் என்ற நிம்மதி எமக்கு இருக்கின்றது.

அந்தவகையில், சாளம்பைக்குளத்திலும் அதற்கு அணித்தான தமிழர் வாழும் சேபாலபுளியங்குளம், பாலிக்குளம் ஆகியவற்றுக்கிடையிலான காணிப் பிரச்சினையை தீர்த்து வைத்து மக்களுக்கும் உதவினோம். தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசல் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, இவ்வாறான நல்ல பணிகளை செய்திருக்கின்றோம். செய்து வருகின்றோம். சமுதாயத்துக்கு துணிவுடன் பணியாற்றுவதனாலேயே கல்லெறிகளும் சொல்லம்புகழும் என்னை மட்டும் குறிவைத்து வீசப்படுகின்றன.

“இவ்வாறான பிரச்சினைகளில் நீங்கள் ஏன் தலையிடுகின்றீர்கள்?” என என் மீது அக்கறையுள்ளவர்களும், சிங்கள நண்பர்களும் அடிக்கடி கேட்டு ஆலோசனைகள் வழங்குகின்ற போதும், அவற்றையும் கணக்கில் எடுக்காது தட்டிக்கழித்து பணி தொடர்கின்றோம். கைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டு மீள்குடியேற்றம், கல்வி அபிவிருத்தி, பாடசாலை வளப்பற்றாக்குறை, வீதி அபிவிருத்தி, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்று எமது பணிகள் வியாபித்து நிற்பதைக் கண்டு அரசியல் காழ்ப்புணர்வாளர்கள் மலைத்துப்போய், பொய்யான பரப்புரைகளை விதைக்கின்றனர்.

வன்னி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களைப் போன்று நானும் ஓர் எம்.பியாக வந்தபோதும் அமைச்சராகி, கட்சி ஒன்றை உருவாக்கி, அதனை வழிநடாத்தும் சக்தியை இறைவன் எனக்குத் தந்திருக்கின்றான்.

ஆசிரியர்களாகிய நீங்கள் சமுதாய வளர்ச்சிக்காகப் பெரும்பங்காற்றுகின்றவர்கள். கல்விச்சொத்தான ஆசிரியர்கள், நல்லதொரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்கள். கடந்தகாலங்களில் அரசியல் அதிகாரம் மூலம் இழந்த கல்வியை மீளப்பெற நாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, நீங்கள் கணிசமான ஒத்துழைப்பை நல்கியிருக்கின்றீர்கள். எனினும், கட்டமைப்பு ரீதியாக அந்த முயற்சியை செயற்படுத்துவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதுடன், வினைத்திறனையும் அதிகரிக்கும் என உணருகின்றோம். அந்தவகையில், உங்களினது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

 

Related Post